வடலூர்: வடலூரில் வள்ளலார் தெய்வ நிலையத்தில் 155வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. நாளை ஏழுதிரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படுகின்ற வள்ளலார் கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய தருமச்சாலை, சத்திய ஞானசபையை 1867 ம் ஆண்டு நிறுவினார். இங்கு கடந்த 150 வருடங்களுக்கும் மேலாக அனைவருக்கும் 3 வேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அது போல் இந்த ஆண்டு 155 வது ஜோதி தரிசன விழாவையொட்டி, சத்திய ஞானசபையில் இன்று அதிகாலை 5 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது. இதைத்தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தரும சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து வள்ளலார் பிறந்த ஊரான மருதூர் வள்ளலார் சந்நிதியில் மருதூர் கிராம மக்களால் கொடியேற்றப்பட்டது. இதையடுத்து வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரியச்செய்த நற்கருங்குழியிலும், அவர் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்திலும் சன்மார்க்க கொடிகள் ஏற்றப்பட்டது.
இதையடுத்து சத்திய ஞானசபைக்கு இடம் வழங்கிய பார்வதிபுரம் கிராம மக்கள் பலவகை பழங்கள், சீர்வரிசைப் பொருள்களுடன், வள்ளலார் பயன்படுத்திய பொருள்களையும் வள்ளலார் திருவுருவ படத்தையும் பல்லக்கில் வைத்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக சத்திய ஞான சபை வளாகத்தில் அமைந்துள்ள கொடிமரம் அருகே வந்து ஒன்று கூடினர்.பின்னர் சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ‘அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி’ என்ற வள்ளலாரின் பாடலை பாடியும் வள்ளலார் எழுதிய கொடி பாடல்களைப்பாடிக்கொண்டே காலை 10 மணியளவில் சன்மார்க்க கொடியை ஏற்றி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நாளை (பிப்ரவரி 1ம் தேதி) தைப்பூச ஜோதி தரிசனம் ஏழு திரை விலக்கி காண்பிக்கப்படும். காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடைபெறும். தொடர்ந்து காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, மறுநாள் (2ம் தேதி) காலை 5.30 மணி என 6 காலங்களில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெறும். இதையடுத்து 3ம் தேதி செவ்வாய்கிழமை மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் சித்திவளாகத் திருஅறை தரிசனமும் நடைபெறும்.ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கானவர்கள் வடலூரில் ஒன்று கூடுவார்கள் என்பதால், 1700 க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
