மெக்சிகோ சிட்டி: ‘ஸ்பைடர்மேன்’ கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்து பிரபலமான மெக்சிகோ நடிகர் அலெக்சிஸ் ஒர்டேகா காலமானார். ‘ஸ்பைடர்மேன்’ திரைப்படங்களில் வரும் பீட்டர் பார்க்கர் கதாபாத்திரத்திற்கு லத்தீன் அமெரிக்க ஸ்பானிய மொழியில் குரல் கொடுத்து உலக அளவில் பிரபலமான நடிகர் மெக்சிகோவைச் சேர்ந்த அலெக்சிஸ் ஒர்டேகா. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குரல் கொடுக்கும் துறையில் முக்கிய நபராக வலம் வந்த இவர், ‘பிக் ஹீரோ 6’ திரைப்படத்தில் வரும் தடாஷி ஹமாடா கதாபாத்திரம் மற்றும் ‘ஸ்டார் வார்ஸ்: ரோக் ஒன்’, ‘ஃபைண்டிங் டோரி’, ‘கார்ஸ் 3’ போன்ற திரைப்படங்களுக்கும் குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் தனது 38வது வயதில் கடந்த 24ம் தேதி திடீரென காலமானார்.
இவரது மறைவுச் செய்தி நேற்று முன்தினம் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் சக கலைஞர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அவரது மரணத்திற்கான அதிகாரப்பூர்வ காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த நேரத்தில் தனிப்பட்ட விவரங்களை வெளியிட விரும்பவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் நடக்கவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சினிமாக்களை ஸ்பானிய மொழிக்கு கொண்டு சேர்த்த இவரது பங்களிப்பைப் பாராட்டி ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
