×

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் குமரியில் ரூ.200 கோடி பண பரிவர்த்தனைகள் பாதிப்பு

*ஏடிஎம்களும் முடங்கியதால் பொதுமக்கள் தவிப்பு

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ரூ.200 கோடி அளவில் பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டது.

வங்கி ஊழியர்களுக்கு தற்போது மாதத்தின் இரண்டு சனிக்கிழமைகள் விடுமுறையாக உள்ள நிலையில், ஐடி மற்றும் காப்பீட்டுத் துறைகளைப் போல அனைத்து சனிக்கிழமைகளையும் பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.

ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத் தொகையை தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப உயர்த்தி வழங்க வேண்டும். வங்கிகளில் நிலவும் ஆட்கள் பற்றாக்குறையைப் போக்க, காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் மற்றும் பணிச்சுமையைக் குறைக்க வேண்டும். 12-வது இரு தரப்பு ஊதிய ஒப்பந்தத்தின் கீழ் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஒரு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அந்தவகையில் நேற்று காலையில் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கி நடந்தது. இந்த வேலைநிறுத்தத்தில் பொதுத்துறை மற்றும் சில தனியார் துறை வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர். ஊழியர்கள் பணிக்கு வராததால் வங்கி கிளைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் வங்கிகளில் பணப் பரிவர்த்தனை, காசோலைத் திருத்தம் மற்றும் இதர வங்கிச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

ஏடிஎம் சேவைகள் மற்றும் இணையவழி வங்கிச் சேவைகள் தடையின்றி இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 3 நாட்களாக விடுமுறை என்பதால் ஏடிஎம்களில் பலவற்றிலும் பணம் இல்லாத சூழல் காணப்பட்டது.

வங்கிகளால் நேரடியாக பணம் நிரப்பப்படும் ஏடிஎம்களில் பணமின்றி முடங்கின. குமரி மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், பல்வேறு தனியார் துறை வங்கிகளின் 260 வங்கி கிளைகளை சேர்ந்த சுமார் 1600 பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வங்கி சேவைகள் முழுமையாக முடங்கியது.

குமரி மாவட்டத்தில் மட்டும் ரூ.200 கோடி அளவுக்கு பண பரிவர்த்தனைகள் முடங்கியது என்று வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் வடசேரியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பிரதான கிளை முன்பு வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் முகேஷ் வரவேற்றார். குமரி மாவட்ட வங்கி ஊழியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் தலைமை வகித்தார். குமரி மாவட்ட வங்கி ஊழியர் சங்க தலைவர் சுரேஷ், வங்கி ஊழியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் சாகுல்ஹமீது, நிர்வாகிகள் ஜாக்சன் கென்னடி, சார்லஸ் ராஜ்பால், அபிதா, செல்வன், விஷ்ணு உள்ளிட்டோர் பேசினர். பரத் நன்றி கூறினார்.

Tags : Kumari ,Nagercoil ,
× RELATED தமிழ்நாட்டில் 1299 காவல் உதவி ஆய்வாளர்...