×

சோளிங்கர் அண்ணாசிலை அருகே ஏடிஎம்மில் கேட்பாரற்று கிடந்த ரூ.1 லட்சம் பணம்

*போலீசில் ஒப்படைத்த இளைஞர்

சோளிங்கர் : சோளிங்கர் அண்ணா சிலை அருகே உள்ள ஏடிஎம்மில் கேட்பாரற்று கிடந்த ரூ.1 லட்சம் பணத்தை இளைஞர் மீட்டு இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த ஆயல் கிராமம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் சோழன்(30). அவர் சோளிங்கர் அண்ணா சிலை அருகே உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக நேற்று சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் அருகே ரூ.500 தாள்கள் அடங்கிய ரூ.1 லட்சம் பணம் கேட்பாரற்று கிடந்தது.

முன்னதாக ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க வந்த யாரோ பணத்தை தவற விட்டு சென்றுள்ளனர். இதையறிந்த சோழன் அந்த பணத்தை எடுத்துச் சென்று, சோளிங்கர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தார். அப்போது, சோழனுக்கு காவல்துறையினர் சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தனர். பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

இன்றைய நவீன நாகரீக உலகில் பணத்தின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. செல்வந்தர்கள் மேலும் மேலும் பணம் சேர்க்க ஓடுகிறார்கள். ஏழைகள் அன்றாட தேவைகளுக்காக பணம் சம்பாதிக்கிறார்கள்.

அப்படி சேமிக்கப்படும் பணம், திடீரென தொலைந்து போனால் அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது. அவ்வாறு யாரோ தொலைத்த ரூ.1 லட்சம் பணத்தை இளைஞர் மீட்டு போலீசில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags : Anna Statue ,Solingar ,Inspector ,Ramachandran ,Ranipet district ,Ayal village ,Vinayagar Koil Street… ,
× RELATED தமிழ்நாட்டில் 1299 காவல் உதவி ஆய்வாளர்...