- டவுன் ரயில் நிலையம் சாலை
- நாகர்கோவில்
- குமாரி மாவட்டம்
- சென்னை ராம்பூர்
- கொல்லம்
- திருச்சி-திருவனந்தபுரம்
*பைக், ஆட்டோக்களில் செல்பவர்கள் கடும் அவதி
நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் முக்கியமான ரயில் நிலையமாக மாறி உள்ளது. தற்போது சென்னை எழும்பூர் – கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட ரயில்கள் நின்று செல்கின்றன.
புதிதாக அறிவிக்கப்பட்ட எர்ணாகுளம் – தாம்பரம் வாராந்திர அம்ரீத் பாரத் ரயில் (நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை வழி) நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் தான் நின்று செல்கிறது. ஆண்டு தோறும் சுமார் 5 லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இந்த ரயில் நிலையத்தில் தற்போது 3 பிளாட்பாரங்கள் உள்ளன. இதில் முதல் பிளாட்பாரத்தில் ரயில்களை உள் வாங்க முடியாது. 2 வது மற்றும் 3 வது பிளாட்பாரத்தில் தான் ரயில்கள் வந்து செல்கின்றன. பயணிகளுக்கான லிப்ட் வசதியும் இந்த ரயில் நிலையத்தில் உள்ளது. முக்கியமான ரயில்கள் வந்து செல்வதால், தற்போது டவுண் ரயில் நிலையத்தை அதிகளவில் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி – பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில், நாகர்கோவில் – கோட்டயம் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய இரு ரயில்கள் டவுண் ரயில் நிலையத்தில் இரு மார்க்கத்திலும் நின்று செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இரு ரயில்களும் நேற்று முதல் டவுண் ரயில் நிலையத்தில் நின்று சென்றன. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்னும் பல முக்கிய ரயில்கள் டவுண் ரயில் நிலையம் வழியாகவே இயக்கப்பட உள்ளன. குறிப்பாக திருவனந்தபுரம் – சென்னை இடையிலான படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைந்ததும், டவுண் ரயில் வழியாக இந்த ரயில் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரயில் நிலையத்துக்கு முக்கிய ரயில்கள் வரும் நேரங்களை கணக்கீட்டு தற்போது பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாகர்கோவில் எம்.எஸ். ரோட்டில் இருந்து பள்ளிவிளை வழியாக டவுன் ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டும்.
இந்த சாலை ரயில்வே, மாநகராட்சி என இரு துறையின் பராமரிப்பில் உள்ளது. பள்ளிவிளை காமராஜர் சாலை என மாநகராட்சி பெயர் வைத்துள்ளது. பள்ளிவிளை சந்திப்பு முதல் சானல்கரை வரை மாநகராட்சி பராமரிப்பில் உள்ளது.
பள்ளிவிளை சானல் சந்திப்பு கடந்து ரயில் நிலையம் வரை உள்ள சாலை ரயில்வே துறை வசம் உள்ளது. ரயில்வே துறை வசம் உள்ள பகுதி மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இரவு நேரங்கள், அதிகாலை வேளைகளில் வரும் ரயில்களுக்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமத்தை சந்திக்கிறார்கள். போதிய வெளிச்சம் இல்லாத நிலையும் உள்ளது. பைக்குகளில் வருபவர்கள் குண்டும், குழியுமான ரோட்டில் விழுந்து படுகாயம் அடைகிறார்கள்.
பஸ்கள், ஆட்டோக்களில் செல்பவர்களும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். சுமார் 2 வருடங்களுக்கு முன் தான் இந்த பகுதியில் சாலை போடப்பட்டது. ஆனால் அதற்குள் தற்போது பல்லாக்குழியாகி கிடக்கிறது. எனவே பயணிகள் நலன் கருதி, ரயில்வே நிர்வாகம் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இனிப்பு வழங்கி மகிழ்ச்சி
நாகர்கோவில் சந்திப்பு – கோட்டயம் ரயில், கடந்த 2020 வரை பயணிகள் ரயிலாக இருந்தது. அப்போது டவுன் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. 2020 ல் கொரோனா தாக்கத்தின் போது பல ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதில் நாகர்கோவில் – கோட்டயம் ரயிலும் நிறுத்தப்பட்டது. பின்னர் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்யப்பட்டு இயங்க தொடங்கியதால், டவுண் ரயில் நிலையத்தில் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டது.
தற்போது மீண்டும் டவுன் ரயில் நிலையத்தில், நிறுத்தம் அனுமதிக்கப்பட்டு நேற்று முதல் நின்று செல்கிறது. இதை வரவேற்கும் விதமாக நேற்று மதியம் 1.05 மணிக்கு நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்தில் நின்ற நாகர்கோவில் – கோட்டயம் எக்ஸ்பிரஸ் ரயிலின், இன்ஜின் டிரைவருக்கும், பயணிகளுக்கும் டவுன் ரயில் நிலைய பயணிகள் அமைப்பினர் இனிப்பு வழங்கினர்.
