பழநி தைப்பூச சிறப்பு ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும்: பக்தர்கள் வலியுறுத்தல்

மானாமதுரை, ஜன.26: பழநி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பிப்.1 மற்றும் 2ம் தேதிகளில் மதுரை – பழநி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டித்து இயக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநியில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவிற்கு தமிழ்நாடு, கேரளா மாநில பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வருவது வழக்கம். தமிழகம் முழுவதும் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் ஊர் திரும்ப பஸ்களில் சிரமத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த ஆண்டு பிப்.11ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட்டது போல இந்தாண்டும் பிப்.1ம் தேதி மற்றும் 2 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுரையில் இருந்து வரும் பிப்.1ம் தேதி காலை 6 மணிக்கு மதுரையில் புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06145) காலை 8:30 மணிக்கு பழநி செல்லும். மீண்டும் அதே நாளில் மதியம் 2:25 மணிக்கு பழநியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்:06146) மாலை 5 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த சிறப்பு ரயில் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் மொத்தமாக 17 முன்பதிவு இல்லாத பெட்டிகள் உள்ளது.

இந்த ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரையில் இருந்து பழநி செல்லும் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும். ஏனென்றால் கடந்த ஒரு வாரமாக ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை, பழநி வழியாக ெசல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் முன்பதிவில்லாத பெட்டிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தைப்பூசத்தன்று இதை விட அதிக கூட்டம் வர வாய்ப்புள்ளதால், ஜன.30ம் தேதி முதல் பிப்.3ம் தேதி வரை ராமேஸ்வரம் பழநி இடையே சிறப்பு ரயிலை இயக்க மதுரை கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: