×

போதை வீடியோவை வார்டன் தந்தைக்கு அனுப்பியதால் விடுதி மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை: ஆத்திரத்தில் விடுதியை சூறையாடிய மாணவர்கள்

நொய்டா: குடிபோதையில் வந்ததாக கூறி வீடியோ எடுத்து தந்தைக்கு அனுப்பியதால், பிடெக் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த உதித் சோனி என்ற 20 வயது பிடெக் இரண்டாம் ஆண்டு மாணவர், கிரேட்டர் நோய்டாவில் உள்ள நாலேஜ் பார்க்-3 பகுதியில் தனியார் விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த 23ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு இவர் தனது நண்பர்களுடன் மதுபோதையில் விடுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனை கவனித்த விடுதி வாரடன், மாணவரை வீடியோ எடுத்து அவரது தந்தை விஜய் சோனிக்கு அனுப்பியுள்ளார். வீடியோவை பார்த்த தந்தை, தொலைபேசியில் மாணவரை கண்டித்ததுடன், படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிற்கு வருமாறு மிரட்டியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான உதித் சோனி, விடுதியின் 4வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சக மாணவர்கள் கூறுகையில், ‘இரவு 9 மணியளவில் விடுதிக்கு வந்த உதித் சோனியை விதிகளை மீறியதாக கூறி வாரடன் கண்டித்தார். இதற்கிடையே வாரடன் மற்றும் பவுன்சர்கள் பிவிசி பைப்பால் மாணவரை கடுமையாக தாக்கினர். இந்த அவமானம் தாங்காமலே அவர் உயிரை மாய்த்துக் கொண்டார்’ என்று குற்றம் சாட்டினர். மாணவரின் மரணத்தால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள், விடுதி ஜன்னல்கள் மற்றும் அங்கிருந்த பஸ்சை அடித்து நொறுக்கி சூறையாடினர். மாணவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், விடுதி உரிமையாளர் மற்றும் வாரடன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பதற்றம் நிலவுவதால் விடுதி முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Noida ,BTech ,Udit Soni ,Jhansi, Uttar Pradesh ,Greater Noida… ,
× RELATED கேரளா முன்னாள் முதல்வர்...