வனத்துறைக்கு நிலம் ஒதுக்கீடு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு

சிவகங்கை, ஜன.24: மானாமதுரை அருகே வனத்துறைக்கு நிலம் ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விளாக்குளம் கிராம மக்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் திட்டத்துக்காக வனத்துறை நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு ஈடாக, மானாமதுரை அருகே உள்ள விளாக்குளம் பகுதியில் சுமார் 300 ஏக்கருக்கு மேல் உள்ள நிலத்தை வருவாய்த்துறை சார்பில் வனத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த இடம் கிராமங்களில் உள்ள ஆடு, மாடுகளுக்கான மேய்ச்சல் நிலமாகும். கண்மாய்க்கான நீர்ப்பிடிப்பு பகுதியான இந்த இடத்தில் பெய்யும் மழை தான் கண்மாய்க்கு செல்கிறது. இந்நிலையில் இந்த இடத்தில் அளவீடு செய்து வேலி அமைக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக வனத்துறை அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்ய சென்றபோது, எதிர்ப்பு தெரிவித்தோம். வேலி அமைத்தால் கால்நடைகள் மேய்வதற்கும், கண்மாய்க்கு தண்ணீர் செல்வதற்கும் தடையாகி விடும். எனவே வனத்துறைக்கு ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Related Stories: