ஊட்டி: நீலகிரியில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை கடும் பனிப்பொழிவு காணப்படும். இச்சமயத்தில் தேயிலை செடிகள் மட்டுமின்றி, வனப்பகுதிகளில் உள்ள சிறிய மரங்கள் மற்றும் செடி. கொடிகளும் உறைபனியில் கருகிவிடும். இச்சமயங்களில் காட்டுத் தீ பரவாமல் தடுக்க வனத்துறையினர் தீ தடுப்புக் கோடுகள் ஏற்படுத்துவது வழக்கம். தற்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதிகளில் சுமார் 2600 சதுர கிமீக்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து முதுமலை துணை இயக்குநர் கணேசன் கூறியதாவது: நீலகிரியில் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தமிழகம்-கர்நாடக மாநில எல்லைகளில் 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையில் இருந்து 15 மீட்டர் வரை தீ தடுப்புக் கோடுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர சிங்காரா, மாயார், மசினகுடி மற்றும் தெப்பக்காடு வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 160 கிமீ தூரத்துக்கு சாலையில் இருந்து 6 மீட்டர் தூரம் வரை தீ தடுப்புக் கோடுகள் அமைக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் சுமார் 50 கிமீ தூரத்துக்கும் தீ தடுப்புக் கோடு அமைக்கப்படும். இதற்கென தீ தடுப்புக் காவலர்களால் தீ தடுப்புக் கோடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
இவர்கள், காட்டுத்தீ ஏற்படும் இடங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் காட்டுத்தீ ஏற்படாமல், வனத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மசினகுடி தெப்பக்காடு சாலை. தொரப்பள்ளி – கக்கநல்லா சாலை, முதுமலை மற்றும் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பக எல்லைப் பகுதிகள், முதுமலை மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் தீ தடுப்புக் கோடுகள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. கல்லட்டி மசினகுடி சாலை, சிங்காரா, வாழைத்தோட்டம் மற்றும் மசினகுடி போன்ற மக்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் உள்ள சாலையோரங்களில் இப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காட்டுத் தீ ஏற்பட்டால் தீ தடுப்பு உபகரணங்கள், டிராக்டர், தண்ணீர் லாரிகள் பயன்படுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வளர்ப்பு யானைகளும் தீத்தடுப்புப் பணிக்காகவும், ரோந்து பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளன. சுற்றுலா பயணிகள் வனப்பகுதிகளுக்குள் சென்று புகை பிடிப்பது, மது அருந்துவது, தீ மூட்டி சமையல் செய்வதை தவிர்க்க வேண்டும். கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தீப்பிடித்தால். உடனுக்குடன் தகவல் தெரிவிக்கும் வகையில் ஊழியர்களுக்கு வாக்கி-டாக்கி வழங்கப்பட்டுள்ளது. வனங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு, காட்டுத் தீ ஏற்படாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்படும், இவ்வாறு அவர் கூறினார்.
