சித்திரக்கூடம்: சித்திரக்கூடத்தில் 13 வயது சிறுவன் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபர் ஒருவர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் பர்கர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அசோக் கேசர்வானியின் 13 வயது மகன் ஆயுஷ், நேற்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்டார். கடத்தல்காரர்கள் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டிய நிலையில், இதுகுறித்து சிறுவனின் தந்தை போலீசில் புகார் அளித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த கடத்தல்காரர்கள், போலீசாரிடம் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தில் சிறுவனை அன்றிரவே கொடூரமாகக் கொலை செய்து, உடலை ஒரு பெட்டியில் அடைத்து சாலையோரம் வீசிச் சென்றனர். இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தொழில்நுட்பக் கண்காணிப்பு மூலம் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இன்று அதிகாலை பர்கர் பகுதியில் பதுங்கியிருந்த கடத்தல்காரர்களை போலீசார் சுற்றி வளைத்தபோது, அவர்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் போலீசார் நடத்திய என்கவுண்டரில், கடத்தல் கும்பலைச் சேர்ந்த சுமார் 70 வயதான கல்லு என்கிற சாவே இமான் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு குற்றவாளியான இர்பான் அன்சாரி காலில் குண்டடிபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணையில், கைதான நபர்கள் சிறுவனின் குடும்பத்திற்குத் தெரிந்தவர்கள் அல்லது வாடகைக்கு இருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
