×

வடிகால் நீர் செல்வது தொடர்பாக மோதல்; டாக்டரை தாக்கிய நடிகர் மீது வழக்கு: நகராட்சி கவுன்சிலரும் சிக்கினார்

 

கோட்டயம்: கேரளாவில் நிலத்தகராறு காரணமாக டாக்டரை தாக்கியதாகப் பிரபல மலையாள நடிகர் மற்றும் அவரது சகோதரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி அருகே பெருன்னா பகுதியில் டாக்டர் ஸ்ரீகுமார் (67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்டுவதற்கான பணிகள் மற்றும் வடிகால் நீர் செல்வது தொடர்பாகப் பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணபிரசாத் குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் டாக்டர் ஸ்ரீகுமார் தனது இடத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கே வந்த நடிகர் கிருஷ்ணபிரசாத் மற்றும் நகர்மன்ற கவுன்சிலரான அவரது சகோதரர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர். இதனை ஸ்ரீகுமார் தனது செல்போனில் வீடியோ எடுத்தபோது, ஆத்திரமடைந்த நடிகர் கையில் வைத்திருந்த குடையால் அவரது தலையிலும், சகோதரர் மார்பிலும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அத்துமீறி நுழைதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இது குறித்து நடிகர் கிருஷ்ணபிரசாத் கூறுகையில், ‘என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை; 40 குடும்பங்கள் பயன்படுத்தும் பாதையை மீட்கவே சென்றேன்; வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிட வாய்ப்புள்ளதால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kottayam ,Kerala ,Dr. ,Sreekumar ,Perunna ,Sanganacharyi ,Kottayam district ,
× RELATED வன்முறை வழக்கில் தலைமறைவாக உள்ள...