திருவனந்தபுரத்தில் போதைப்பொருள் விற்ற 2 போலீசார் சஸ்பெண்ட்

திருவனந்தபுரம், ஜன. 22: திருவனந்தபுரத்தில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கேரளாவில் சமீப காலமாக போதைப்பொருள் பயன்பாடும், புழக்கமும் அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்கள் கூட எம்டிஎம்ஏ போன்ற விலை உயர்ந்த, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் போதைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதைத் தொடர்ந்து போதைப் பொருளை கட்டுப்படுத்த கேரளா முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவனந்தபுரம் மாவட்ட போதைப் பொருள் தடுப்புத் துறை நடத்திய விசாரணையில் போலீசாரே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக திருவனந்தபுரம் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வரும் அபின்ஜித் மற்றும் ராகுல் ஆகிய 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக திருவனந்தபுரம் மாவட்ட எஸ்பி சுதர்சன் தெரிவித்துள்ளார்.

Related Stories: