மாற்றுத்திறனாளி பயனாளிகள் தேர்வு செய்ய சிறப்பு முகாம் வரும் 24ம் தேதி முதல் நடக்கிறது: கலெக்டர் தகவல் அதி நவீன உதவி உபகரணங்கள் வழங்க

திருவண்ணாமலை, ஜன. 22: திருவண்ணாமலை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் தேவைப்படும் பயனாளிகளை தேர்வு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் ஒன்றிய அரசின் சிறப்பு திட்டத்தை திருவண்ணாமலை மாவட்டத்துக்கு எம்பி சி.என்.அண்ணாதுரை கொண்டுவந்தார். அதன்மூலம், அதிக எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்ற மாவட்டங்களின் பட்டியலில், தென்னிந்திய அளவில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடம் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, உதவி உபகரணங்கள் ேதவைப்படும் பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெறும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இது குறித்து, திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்திருப்பதாவது: தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு திருவண்ணாமலை தொகுதி எம்பி மற்றும் ஒன்றிய அரசின் அலிம்கோ நிறுவனம் மூலம், ஏடிபிஐ திட்டத்தின் கீழ் உதவி உபகரணங்களான மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலிகள், சிறப்பு சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள், நடைபயிற்சி உபகரணங்கள், காதொலிக்கருவிகள், பிரெய்லி கிட், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான கிட், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான செல் போன்கள் வழங்கப்படுகிறது.

மேலும், பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் போன்கள், பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வண்டிகள், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள், முடநீக்கு கருவிகள் நவீன செயற்கை கால்கள் போன்ற பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த சிறப்பு முகாமில் பயனாளிகளை தேர்வு செய்ய அரசு எலும்பு மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர் மற்றும் மன நல மருத்துவர் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளை தேர்வு செய்ய உள்ளனர். உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் காலை 10 முதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெறவுள்ள முகாமில் கலந்து கொள்ளலாம். அந்தந்த தொகுதிகளில் நடைபெறும் முகாம்களுக்கு நேரில் சென்று மருத்துவ பரிசோதனை செய்து, தங்களுக்குத் தேவையான உதவி உபகரணங்கள் பெற்று பயனடையலாம். திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் மற்றும் செங்கம் தொகுதிகளுக்கு திருவண்ணாமலை டவுன்ஹால் பள்ளியில் வரும் 24ம் தேதி முகாம் நடைபெறும்.

வந்தவாசி மற்றும் செய்யாறு தொகுதிகளுக்கு வந்தவாசி அரசு ஆண்கள் மெல்நிலைப்பள்ளியில் வரும் 27ம் தேதி முகாம் நடைபெறும். கலசப்பாக்கம் மற்றும் போளுர் தொகுதிகளுக்கு போளுர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் 28ம் தேதியும் ஆரணி தொகுதிக்கு போளுர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் 30ம் தேதியும் முகாம் நடைபெறும். முகாம்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல், குடும்ப அட்டை அசல் மற்றும் நகல் மற்றும் புகைப்படம் 2, ஆகியவற்றை அளித்து உதவி உபகரணங்கள பெற்று பயன்பெறலாம். இவர் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: