லண்டன்: லண்டனைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சீமா ஆனந்தின் ஆபாசப் படங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் லண்டனைச் சேர்ந்த சீமா ஆனந்த் (63) பிரபல எழுத்தாளராகவும், கதை சொல்பவராகவும் இருந்து வருகிறார். இவர் தாம்பத்தியம் மற்றும் உறவுகள் குறித்து பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் பத்திரிகையாளர் சுபங்கர் மிஸ்ரா நடத்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் ஈர்ப்பு, வயது முதிர்வு மற்றும் வயதான பெண்கள் மீதான சமூகப் பார்வை குறித்து அவர் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நேற்று சீமா ஆனந்த் குறித்த ஆபாசமான போலி புகைப்படங்கள் இணையத்தில் பரவத் தொடங்கின.
மர்ம நபர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இவரது முகத்தை வேறு ஒருவரின் உடலில் ஒட்ட வைத்து இந்த வக்கிர செயலை செய்துள்ளனர். இதுகுறித்து வேதனையுடன் சீமா ஆனந்த் கூறுகையில், ‘எனது சமூக வலைதள படங்களைப் பார்த்தபோது உடல் ரீதியாக நான் நோய்வாய்ப்பட்டது போல் உணர்ந்தேன். இது பெண்களை போகப் பொருளாக பார்க்கும் வக்கிர மனநிலையை காட்டுகிறது. சமூகம் இதுபோன்ற செயல்களை நியாயப்படுத்துவதை நிறுத்தும் வரை இந்த பிரச்னை மோசமாகிக்கொண்டே போகும். தொழில்நுட்பம் மூலம் பெண்களுக்கு எதிராக நடக்கும் இந்த வன்முறை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
