மறியலில் ஈடுபட முயன்ற சத்துணவு ஊழியர்கள் 277 பேர் கைது

விருதுநகர், ஜன. 21: விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சத்துணவு ஊழியர்கள் 277 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட செயலாளர் பாலம்மாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கால முறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடையாக சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அதை தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் வெளியே உள்ள நான்கு வழிச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து சத்துணவு ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட முயன்ற 277 பேரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: