ஆண்டிபட்டி, ஜன. 21: ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் மண்டலாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரில் சக்கம்பட்டி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற அருள்மிகு அன்னை முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்கள் நிறைவடைந்த நிலையில், நேற்று மண்டலாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, காலையில் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, தீர்த்தக் குட ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பால், பழம், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவினை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த மண்டலாபிஷேக விழாவில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அறநிலையத்துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
