கோயிலில் அங்கீகரிக்கப்படாத அர்ச்சகர்கள் நியமன விவகாரம் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அதிகாரிகள் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அங்கீகரிக்கப்படாத அர்ச்சகர்கள் உள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருத்தொண்டர் அமைப்பின் தலைவர் ஏ.ராதாகிருஸ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் அங்கீகாரம் இல்லாத அர்ச்சகர்கள் உள்ளனர். கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடக்கிறது என்று டி.ஜி.பி., நாமக்கல் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, திருச்செங்கோடு டவுண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோரிடம் புகார் கொடுத்தேன்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய திருச்செங்கோடு டவுண் போலீஸ் இன்ஸ்பெக்டர், சில விவரங்களை கோயில் நிர்வாகத்திடம் கேட்டார். கோயில் நிர்வாகம் எந்த விவரங்களையும் வழங்கவில்லை. விசாரணைக்கும் ஒத்துழைக்கவில்லை. இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இன்ஸ்பெக்டர் புகாரை முடித்து வைத்து கடந்த 2024ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். எனவே, எனது புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் தரப்பில், முதலில் கோவில் நிர்வாகம் கேட்ட விவரங்களை தரவில்லை. தற்போது விசாரணைக்கு கோவில் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குகின்றனர் என்று கூறப்பட்டது.

இதையடுத்து, புகாரை முடித்து வைத்த இன்ஸ்பெக்டரின் அறிக்கையை ரத்து செய்த நீதிபதி பி.வேல்முருகன், கோயிலில் உள்ள அங்கீகாரம் இல்லாமல், சட்டவிரோதமாக செயல்படும் அர்ச்சகர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீசாருக்கு கடந்த ஆண்டு ஜனவரி 21ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், போலீஸ் அதிகாரிகள எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா, திருச்செங்கோடு டவுண் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வளர்மதி ஆகியோருக்கு எதிராக ராதாகிருஷ்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் உள்ள அங்கீகரிக்கப்படாத அர்ச்சகர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்த அறநிலையத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, நாமக்கல் மாவட்ட கலெக்டர், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர், அறநிலையத்துறை கமிஷனர், இணை கமிஷனர், உதவி கமிஷன், கோயில் அறங்காவலர் ஆகியோரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறேன். இந்த அதிகாரிகள் அனைவரும் வருகிற 23ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: