புதுடெல்லி: சிறையில் உள்ள கைதிகளுக்கும் உரிய மருத்துவ சிகிச்சை பெறுவது அடிப்படை உரிமை என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடூரமான முறையில் கொலை செய்து உடலை எரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஜெகநாத் ஷா என்ற லாலா என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடுமையான நரம்பியல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு, அவசர மருத்துவச் சிகிச்சை தேவைப்படுவதாகக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சிறையில் உள்ள கைதியாக இருந்தாலும், உடல் நலம் பாதிக்கப்படும்போது உரிய சிகிச்சை பெறுவது மனித உரிமை என்றும், அவருக்குத் தேவையான உயரிய சிகிச்சைகளை வழங்க அரசு மறுக்கக் கூடாது என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனுவை நேற்று விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி கிரிஷ் கக்பாலியா முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அவர் தனது தீர்ப்பில், ‘மிகவும் கொடூரமான குற்றவாளியாக இருந்தாலும், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை பெறுவது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். உயிர் வாழ்வதற்கான உரிமையில் உடல் நலமும் அடங்கும்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், சம்மந்தப்பட்ட கைதிக்கு உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் மூளை தொடர்பான சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனைகளை ஒரு வாரத்திற்குள் முன்னுரிமை அடிப்படையில் செய்து முடிக்க வேண்டும் என்றும், இதற்கான ஏற்பாடுகளைச் சிறை கண்காணிப்பாளர் மற்றும் விசாரணை அதிகாரி உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
