புனே: கொலை வழக்கில் சிறையில் உள்ள இரண்டு பெண்கள் புனே மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பிரபல ரவுடியாக வலம் வந்த சூர்யகாந்த் என்கிற பந்து அந்தேகர் என்பவரின் மருமகள் சோனாலி அந்தேகர் மற்றும் உறவுப் பெண் லட்சுமி அந்தேகர் ஆகியோர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டனர். கடந்த 2024ம் ஆண்டு முன்னாள் கவுன்சிலரான சோனாலியின் கணவர் வன்ராஜ் அந்தேகர் கொல்லப்பட்டார்.
இதற்கு பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் ஆயுஷ் கோம்கர் என்பவரை 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொலை செய்த வழக்கில் இவர்கள் இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர்கள் சிறையில் இருந்தபோதிலும், அவர்களது குடும்பத்தினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற புனே மாநகராட்சித் தேர்தலில் நானா பேத் – கணேஷ் பேத் வார்டில் (வார்டு எண் 23) போட்டியிட்ட இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். சோனாலி அந்தேகர், முன்னாள் எம்எல்ஏ ரவீந்திர தங்கேகரின் மனைவியைத் தோற்கடித்தார்.
லட்சுமி அந்தேகர், பாஜக வேட்பாளர் ருதுஜா கடாலேவை 174 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். சிறையில் இருந்தபடியே இவர்கள் வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. ‘சிறையிலிருந்தே வெற்றி’ என்று அவர்களது ஆதரவாளர்கள் கொண்டாடினாலும், குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு சீட் வழங்கியதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ரவுடிகளின் ஆதிக்கம் உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
