களைகட்டியது மதுரை மாவட்டம்ஜல்லிக்கட்டு திருவிழா இன்று ஆரம்பம்

 

* முதல் போட்டி அவனியாபுரத்தில் இன்று நடக்கிறது
* நாளை பாலமேடு, நாளை மறுநாள் அலங்காநல்லூர்

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று துவங்குகிறது. மதுரை, அவனியாபுரத்தில் இன்று முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. நாளை நடக்கும் பாலமேடு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், நாளை மறுநாள் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் மு.க.ஸ்டாலினும் துவக்கி வைக்கின்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது ஆண்டுதோறும் ெகாண்டாடப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. தை முதல் நாளான தைப்பொங்கலன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடத்தப்படும்.

இதன்படி, இன்று (ஜன. 15) அவனியாபுரத்திலும், நாளை (ஜன. 16) பாலமேட்டிலும், நாளை மறுநாள் (ஜன. 17) அலங்காநல்லூரிலும் அனல்பறக்க ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன. பாலமேட்டில் நாளை நடக்க உள்ள ஜல்லிக்கட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், நாளை மறுநாள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் மு.க.ஸ்டாலினும் துவக்கி வைத்து பார்வையிடுகின்றனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் அமர்ந்து பார்க்கும் வகையில் பிரத்யேக மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு 3 இடங்களும் தயாராகி வரும் நிலையில் அனல் பறக்க காளைகள் களமாடுகின்றன. ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி பாதுகாப்பு பணிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுகின்றனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவில் கடந்தாண்டு அவனியாபுரத்தில் 2,026 காளைகள், பாலமேட்டில் 4,820 காளைகள், அலங்காநல்லூரில் 5,786 காளைகள் என 12,632 காளைகள் முன்பதிவு செய்யப்பட்டன.

இந்தாண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 3,090 காளைகள், பாலமேட்டில் 5,747 காளைகள், அலங்காநல்லூரில் 6,210 காளைகள் என 15047 காளைகள் முன்பதிவு ெசய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டோடு ஒப்பிடும் போது 2,415 காளைகள் அதிகமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இந்தாண்டு மாடுபிடி வீரர்கள் அவனியாபுரத்தில் 1,849 பேர், பாலமேட்டில் 1,913 பேர், அலங்காநல்லூரில் 1,472 பேர் என 5,234 பேர் முன்பதிவு ெசய்துள்ளனர்.

கடந்தாண்டோடு ஒப்பிடும் போது 735 பேர் அதிகமாக முன்பதிவு செய்துள்ளனர். தகுதியான காளைகள் மற்றும் காளையர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. டோக்கன் அடிப்படையில் அனுமதிக்கப்படுவர். அவனியபுரத்தில் இன்று நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கு டிராக்டர், சிறந்த வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.

* ஜன. 17ல் முதல்வர் மதுரை பயணம்

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர்கள் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து பார்வையிடுகிறார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்காக ஜனவரி 17ல் நேரில் செல்கிறேன். எல்லோருக்குமான திருநாள் பொங்கல். எல்லோருக்குமான அரசு திராவிட மாடல் அரசு. சாதி, பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடு எங்கும் பொங்கட்டும். பொங்கல் விழா, விளையாட்டுப் போட்டி, கோலப் போட்டிகளை எழுச்சியோடு நடத்தி திமுகவினர் பரிசு வழங்க வேண்டும். 2026 பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக, திராவிடப் பொங்கலாக, நமக்கு வெற்றிப் பொங்கலாக இருக்கட்டும். உடன் பிறப்புகளின் உழைப்பால் திமுகவுக்கு வெற்றிப் பொங்கலாக அமையட்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: