நவிமும்பை: மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் நேற்று, மும்பை அணிக்கு எதிராக ஆடிய குஜராத் ஜெயன்ட்ஸ் மகளிர் அணி, 20 ஓவரில், 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்தது. மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 6வது போட்டி நவிமும்பையில் நேற்று நடந்தது. அதில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் மகளிர் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்து வீசியது. முதலில் களமிறங்கிய குஜராத் அணியின் துவக்க வீராங்கனை சோபி டிவைன் 8 ரன்னில் வீழ்ந்து அதிர்ச்சி தந்தார்.
சிறிது நேரத்தில் மற்றொரு துவக்க வீராங்கனை பெத் மூனி 33 ரன்னில் அமெலியா கெர் பந்தில் அவரிடமே கேட்ச் தந்து வீழ்ந்தார். பின் வந்த கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் 20, கனிகா அஹுஜா 35 ரன் எடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அடுத்து இணை சேர்ந்த ஜார்ஜியா வாரெம் (43 ரன்), பார்தி புல்மாலி (36 ரன்), கடைசி நேரத்தில் அதிரடி காட்டி, 24 பந்துகளில் 56 ரன் குவித்தனர். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட் இழந்து 192 ரன் எடுத்திருந்தது. பின்னர், 193 ரன் வெற்றி இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.
