போகி பண்டிகை நாளை கொண்டாட்டம் குமரியில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்

*சொந்த ஊர் திரும்பும் மக்களால் உற்சாகம்

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. வெளியூர்களில் இருப்பவர்களும் ஊர் திரும்பி உள்ளதால், பொங்கல் கொண்டாட்டம் களை கட்டி உள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. நாளை (14ம் தேதி) போகி பண்டிகை ஆகும். 16ம் தேதி மாட்டு பொங்கல் பண்டிகையும், 17ம் தேதி காணும் பொங்கல் விழாவும் கொண்டாடப்பட உள்ளது.

குமரி மாவட்டத்திலும் பொங்கல் கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளன. கிராமங்கள், நகரங்களில் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

கிராமங்கள், நகரங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் நடக்கிறது. அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில் பொங்கல் கொண்டாட்டம் களை கட்டி இருக்கிறது.

பொங்கலுக்கு தேவையான பொருட்களும் கடை வீதிகளில் குவிந்து வருகிறது. நாகர்கோவிலில் ஒழுகினசேரி அப்டா மார்க்கெட், வடசேரி பகுதிகளில் கரும்பு, மஞ்சள் கிழங்கு, பனங்கிழங்கு வகைகள் விற்பனைக்காக குவிந்துள்ளன.

திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து கரும்பு வகைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு கரும்பு ரூ.50, ரூ.60 என தரத்துக்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கட்டு கரும்பு ரூ.600, 800 என விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு வகையிலான கிழங்கு வகைகள் விற்பனைக்காக குவிந்துள்ளன. இவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றவாறு உள்ளனர். தக்கலை, மார்த்தாண்டம் பகுதிகளிலும் வியாபாரிகள் குவிந்துள்ளனர்.

பொங்கல் அடுப்புகளும் விற்பனைக்காக உள்ளன. பொங்கல் வைக்க பனை ஓலைகளும் குவிந்துள்ளன. ஒரு கட்டு ரூ.100, 120 ரூபாய் என விற்கிறார்கள். பொங்கல் கொண்டாட வெளியூர்களில் இருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.

இதனால் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து நாகர்கோவில் வரும் பஸ்களில் அதிகளவில் பயணிகள் கூட்டம் உள்ளது. காலை வேளையில் வடசேரி பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்து உள்ளது.

போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

பொங்கல் பண்டிகையையொட்டி 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா தலங்களில் பெருமளவில் மக்கள் திரள்வார்கள். இதையடுத்து மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில், 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட உள்ளது.

பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. ஸ்டாலின் எச்சரித்துள்ளார். பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் சுற்றுலா தலங்களில் அதிகளவில் மக்கள் திரள்வார்கள்.

இதனால் கன்னியாகுமரி, திற்பரப்பு, தொட்டிப்பாலம், லெமூர் பீச், சங்குதுறை, சொத்தவிளை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை கண்காணிக்கும் சுற்றுலா ரோந்து போலீசார் நியமிக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் போலீசார் இருந்து கண்காணிக்கவும் எஸ்.பி. அறிவுறுத்தி உள்ளார்.

Related Stories: