*10 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணி தீவிரம்
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே டிரெய்லர் லாரியில் கொண்டு சென்ற காற்றாலை இயந்திரம் சாலையில் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பட்டு பகுதியில் இருந்து ஒரு டிரெய்லர் லாரியில் சுமார் 85 டன் எடையுள்ள காற்றாலை இயந்திரம் ஏற்றிக் கொண்டு நேற்று தூத்துக்குடி நோக்கி சென்றது.
லாரியை முசிறியை சேர்ந்த அரவன் (54) என்பவர் ஓட்டிச் சென்றார். இந்நிலையில் நேற்று காலை உளுந்தூர்பேட்டை அடுத்த திருச்சி தேசிய நெடுஞ்சாலை டி. மாவிடந்தல் என்ற இடம் அருகில், டிரைலர் லாரி சென்றபோது, திடீரென ட்ரெய்லரில் இருந்து இயந்திரம் சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த எடைக்கல் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், முத்துக்குமார், போக்குவரத்து ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சென்னையில் இருந்து செல்லும் அனைத்து வாகனங்களையும் மாற்றுப் பாதையில் அனுப்பி வைத்து போக்குவரத்தை சரி செய்தனர்.
நடுரோட்டில் விழுந்த இயந்திரம் மற்றும் லாரியை மீட்கும் பணி கிரேன் மூலம் நடைபெற்றது. மேலும் காற்றாலை இயந்திரம் விழுந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் பிளவு ஏற்பட்டது. சுமார் 85 டன் கொண்ட இயந்திரம் விழுந்ததால் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள கிரேன் மூலம் மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.
பின்னர் நாமக்கலில் இருந்து அதிக எடை கொண்ட பொருட்களை தூக்க கூடிய கிரேன் வரவழைக்கப்பட்டு சாலையில் கிடந்த இயந்திரம் மீட்கும் பணி நடைபெற்றது.
இதனால் தொடர்ந்து நேற்று காலையில் இருந்து சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் அனுப்பி வைக்கப்பட்டது.
ஒரே சாலையில் இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் சென்றதால் வாகன ஓட்டுனர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
