*மம்சாபுரத்தில் தயாரிப்பு பணி மும்முரம்
விருதுநகர் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் பகுதியில் மலையாள உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தைத் திருநாளான பொங்கல் பண்டிகையன்று, வீடுகளில் தயார் செய்யும் சர்க்கரை பொங்கலை தித்திக்க செய்வது அச்சுவெல்லமும், மண்டை வெல்லமும் மட்டுமே.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அச்சுவெல்லம், மண்டை வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டாலும், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு, மம்சாபுரம் பகுதிகளில் பாரம்பரிய முறையில் தயாராகும் மலையாள உருண்டை வெல்லத்திற்கு தனிச்சிறப்பு உண்டு.
எந்த கலப்படமும் இல்லாமல் முழுக்க முழுக்க கரும்பு சாறை மட்டும் பிழிந்து தயாராகும் வெல்லத்திற்கு, பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது. இப்பகுதி விவசாயிகள், கரும்புகளை அறுவடை செய்து, ஆலைகள் அமைத்து, மலையாள உருண்டை வெல்லம் தயார் செய்கிறார்கள்.
பொங்கல் பண்டிகைக்கு ஒரு சில நாட்கள் உள்ள நிலையில், மம்சாபுரம் பகுதியில் உருண்டை வெல்லம் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இங்கு அறுவடை செய்த கரும்புகளை பிழிந்து சாறு எடுத்து, அவற்றை பெரிய கொப்பரைகளில் கொட்டி சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நன்றாக கொதிக்க விடுகின்றனர். சரியான பதத்துக்கு வந்த பின், அவற்றை உறைய வைத்து உருண்டை பிடிக்கிறார்கள். கரும்புச் சாறை காய்ச்சுவதற்கு பெரும்பாலும் கரும்பு சக்கைகளையே எரிபொருளாக பயன்படுத்துகின்றனர்.
இதுகுறித்து விவசாயி குருசாமி, மண்டை வெல்லம் தயாரிப்பாளர் சென்னியப்பன் கூறுகையில், ‘‘இந்த ஆண்டு தொடர் மழை காரணமாக கரும்புகள் நல்ல விளைச்சல் கொடுத்தது. மேலும் இனிப்பு சுவையும் அதிகரித்துள்ளது.
இதனால் கடந்த ஆண்டை விட ஓரளவு வருமானமும் கிடைத்துள்ளது. பொங்கல் பண்டிகையை பொது மக்கள் சந்தோஷத்துடன் கொண்டாடுவதற்காக, சுகாதாரமான முறையில், எந்தவித கலப்படமும் இன்றி மண்டை வெல்லம் தயாரிக்கிறோம்.
ஒரு கிலோ ரூ.55 முதல் ரூ.60 வரை விற்பனை செய்கிறோம். பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பரிசுப் பொருட்களில் மண்டை வெல்லத்தையும் வழங்கினால், எங்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும்’’ என்றனர்.
