×

ஒன்றிய அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து ‘எக்ஸ்’ தளத்தில் 3,500 ஆபாச பதிவுகள் நீக்கம்: 600 பயனர் கணக்குகள் நிரந்தரமாக முடக்கம்

புதுடெல்லி: பிரபல சமூக வலைதளமான ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் உள்ள ‘க்ரோக்’ எனும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்கள் மற்றும் சிறார்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து ஆபாசமாக வெளியிடுவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக கடந்த 2ம் தேதி ‘எக்ஸ்’ நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், 72 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. மேலும் இதுபோன்ற தவறான பயன்பாடுகளைத் தடுக்கத் தவறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும் செயற்கை நுண்ணறிவு மூலம் நடைபெறும் இணையவழி தொந்தரவுகள் குறித்து எக்ஸ் நிறுவனத்தின் மீது விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒன்றிய அரசின் உத்தரவை ஏற்று, நேற்று ‘எக்ஸ்’ சமூக வலைதளம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி விதிமுறைகளை மீறிய சுமார் 600 பயனர் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளதுடன், 3,500 ஆட்சேபனைக்குரிய பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து எக்ஸ் நிறுவனம் தரப்பில், ‘உள்ளடக்க தணிக்கை தரநிலைகளில் ஏற்பட்ட தவறுகளை ஒப்புக்கொள்கிறோம். இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 மற்றும் 2021ம் ஆண்டு விதிகளுக்கு முழுமையாக இணங்கி நடப்போம்’ என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றத் தவறினால் தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 79ன் கீழ் சமூக வலைதளங்களுக்கு கிடைக்கும் சட்டப் பாதுகாப்பு ரத்து செய்யப்படும் எனவும், நிறுவன நிர்வாகிகள் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது.

Tags : Union government ,New Delhi ,X ,
× RELATED விண்வெளியில் இந்தியாவின் புதிய பாய்ச்சல்: நாளை விண்ணில் பாய்கிறது PSLV-C62!