புதுடெல்லி: குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் நவீன் சாவ்லா, மது ஜெயின் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: மனைவி விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளாமல் பிரிந்து சென்ற பிறகு, மனுதாரரான அரசு ஊழியர் 1983ல் வேறொரு பெண்ணுடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். அந்த உறவின் மூலம் 2 குழந்தைகள் பிறந்தன.
லிவ் இன் உறவில் இருந்தால் மனைவியையும் மகளையும் புறக்கணித்ததாக குற்றம்சாட்டப்பட்டு அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக 4 ஆண்டுகளுக்கு ஊதிய குறைப்பு தண்டனையை அவர் எதிர்கொண்டுள்ளார். தற்போது குடும்ப ஓய்வூதியத்தில் 40 ஆண்டாக சேர்ந்த வாழ்ந்த துணை மற்றும் குழந்தைகளின் பெயர்களை சேர்க்கும் அவரது முயற்சிகளை தவறான நடத்தை என கருதி ஓய்வுக்கு பிந்தைய பலன்களை மறுப்பது சரியல்ல. இதுதொடர்பான மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்கிறோம்.
மனுதாரரின் நிறுத்தப்பட்ட மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையின் 50 சதவீதத்தை, ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த அறிவுறுத்துகிறோம். அதே போல, குடும்ப ஓய்வூதியம் மற்றும் சுகாதார வசதிகளுக்கான பட்டியலில் துணை மற்றும் அவரது குழந்தைகளின் பெயர்கைள சேர்ப்பதற்கான மனுதாரரின் கோரிக்கையை கருத்தில் கொள்ளுமாறு அரசுக்கு பரிந்துரைக்கிறோம். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
