×

சிறார் காதல் ஜோடிகளை பாதுகாக்க வேண்டி ‘ரோமியோ – ஜூலியட்’ விதியை ஒன்றிய அரசு பரிசீலிக்க வேணும்!: போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய சுப்ரீம்கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: சிறார் காதல் விவகாரங்களில் ‘ரோமியோ ஜூலியட்’ விதியை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசை கேட்டுக்கொண்டுள்ளது. குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்காக போக்சோ சட்டம் கடந்த 2012ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால், சமீபகாலமாக இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. பரஸ்பர சம்மதத்துடன் பழகும் இளம் வயது காதல் ஜோடிகளைப் பிரிப்பதற்காகவும், குடும்பப் பகையை தீர்த்துக்கொள்ளும் பழிவாங்கும் நோக்கத்தோடும் இச்சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதனால், காதலித்த ஒரே காரணத்திற்காக இளைஞர்கள் கடும் குற்றவாளிகளைப் போல சிறையில் அடைக்கப்படும் சூழல் நிலவுகிறது.

இது அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று முன்தினம் முக்கியத் தீர்ப்பை வழங்கியது. அதில், ‘இளம் வயதினர் இடையேயான காதலையும், வன்முறையான பாலியல் குற்றங்களையும் ஒரே தராசில் வைத்து பார்ப்பது அநீதியானது’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். எனவே, ‘வயது வித்தியாசம் குறைவாக உள்ள சிறார் காதல் ஜோடிகளை கடுமையான தண்டனையில் இருந்து காக்க, மேலை நாடுகளில் உள்ளதைப் போல ‘ரோமியோ – ஜூலியட்’ விதியை இந்தியாவிலும் அமல்படுத்துவது குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும், ‘வயது வரம்பை தீர்மானிக்க பள்ளிச் சான்றிதழ்களே முதன்மையானது; மருத்துவப் பரிசோதனையை கடைசித் தேர்வாக மட்டுமே கொள்ள வேண்டும்’ என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ரோமியோ-ஜூலியட்’ விதி என்றால் என்ன?
‘ரோமியோ – ஜூலியட்’ விதி என்பது வயதுக்கு வராத சிறார்கள் (18 வயது பூர்த்தியடையாத) பரஸ்பர விருப்பத்துடன் காதல் மற்றும் பாலியல் உறவு வைத்துக்கொள்ளும்போது, அவர்களைக் கடுமையான குற்றவாளிகளாகக் கருதாமல் சட்டரீதியான பாதுகாப்பு அளிக்கும் ஒரு விதிமுறையாகும். தற்போது இந்தியாவில் 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வது, அந்தப் பெண்ணின் சம்மதத்துடன் நடந்திருந்தாலும், போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படுகிறது. இதனால் 19 அல்லது 20 வயது இளைஞர்கள் கூட, 17 வயது பெண்ணைக் காதலித்தால் கடும் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடு
கிறது.

‘ரோமியோ – ஜூலியட்’ விதி அமலுக்கு வந்தால், காதலர்கள் இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் குறைவாக இருக்கும் பட்சத்தில் (உதாரணமாக 3 அல்லது 4 ஆண்டுகள்), அந்த உறவு பரஸ்பர விருப்பத்தின் பேரில் நடந்திருந்தால், அந்த இளைஞர் மீது கடுமையான போக்சோ சட்டப் பிரிவுகள் பாயாது. அவருக்குத் தண்டனையிலிருந்து விலக்கு அல்லது குறைவான தண்டனை அளிக்க இது வழிவகுக்கும்.

வளர் இளம் பருவத்தினரிடையே (டீனேஜர்ஸ்) ஏற்படும் இயல்பான ஈர்ப்பு மற்றும் காதலை, வன்முறையான பாலியல் குற்றங்களிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பதே இந்த விதியின் நோக்கமாகும். உண்மையான குற்றவாளிகளைத் தண்டிப்பதும், காதலர்களைச் சிறைக்கு அனுப்புவதைத் தவிர்ப்பதுமே இதன் அடிப்படை நோக்கமாகும். மேலை நாடுகளில் ‘ரோமியோ – ஜூலியட்’ ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தற்போது இந்தியாவிலும் இதனை அமல்படுத்துவது குறித்துப் பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : EU Government ,Supreme Court ,New Delhi ,EU ,Juliet ,
× RELATED இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப்...