×

மணிப்பூரில் போதைப்பொருள் வேட்டை; 40 ஏக்கர் ‘கசகசா’ பயிர் தீவைத்து அழிப்பு: ராணுவம், போலீசார் அதிரடி நடவடிக்கை

இம்பால்: மணிப்பூரில் நடைபெற்ற கூட்டு சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 40 ஏக்கர் கசகசா பயிர்களை பாதுகாப்புப் படையினர் தீயிட்டு அழித்தனர்.மணிப்பூர் மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத பயிர் சாகுபடியை அடியோடு ஒழிக்கும் நோக்கில் மாநில அரசு ‘போதைப்பொருள் மீதான போர்’ என்ற பெயரில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் ஜனவரி 6ம் மற்றும் 7ம் தேதிகளில் காங்போக்பி மலைப்பகுதிகளில் பல்வேறு முகமைகள் இணைந்து நடத்திய சோதனையில் சுமார் 53 ஏக்கர் பரப்பளவிலான கசகசா பயிர்கள் அழிக்கப்பட்டன.

இச்சம்பவம் நடந்து சில நாட்களே ஆன நிலையில் தற்போது மீண்டும் பாதுகாப்புப் படையினர் பெரிய அளவிலான சோதனையை நடத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 9ம் தேதி அசாம் ரைபிள்ஸ், சிஆர்பிஎப் மற்றும் மணிப்பூர் போலீசார் இணைந்து சேனாபதி மாவட்டத்தில் உள்ள ஙடன் மலைப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வனத்துறையினர் உதவியுடன் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்ததில், மிகவும் கரடுமுரடான மற்றும் மறைவான இடங்களில் சட்டவிரோதமாக கசகசா பயிரிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சுமார் 40 ஏக்கர் பரப்பளவிலான கசகசா பயிர்களையும், போதைப்பொருளை பதுக்கி வைக்கவும், பதப்படுத்தவும் பயன்படுத்தப்பட்ட 11 குடிசைகளையும் பாதுகாப்புப் படையினர் தீயிட்டு கொளுத்தினர். மேலும் அங்கு கைப்பற்றப்பட்ட உரம், உப்பு, பாசன குழாய்கள் மற்றும் விவசாய உபகரணங்களும் அழிக்கப்பட்டன. அழிக்கப்பட்ட பயிர்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Manipur ,Imphal ,
× RELATED விண்வெளியில் இந்தியாவின் புதிய பாய்ச்சல்: நாளை விண்ணில் பாய்கிறது PSLV-C62!