சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை அடுத்து “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்ததாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஓய்வூதிய நிதியத்துக்கு தமிழ்நாடு அரசின் பங்களிப்பாக ரூ.11,000 கோடி வழங்கப்படும். ஓய்வூதியதாரர்கள் இறந்துவிட்டால் அவர் பெற்று வந்ததில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
அரசு அலுவலர்கள் பணி ஓய்வு, பணி காலத்தில் இறக்க நேரிட்டால் ரூ.25 லட்சம் வரை பணிக்கொடை வழங்கப்படும். 10 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் ஓய்வூதியம் வழங்கப்படும் என திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த ஓய்வூதிய நிதியத்துக்கு தமிழ்நாடு அரசு ரூ.13,000 கோடி நிதி வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டம் அமலாகும் முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும். புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை ஜன.3ம் தேதி முதலமைச்சர் அறிவித்தார். 23 ஆண்டு கால போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த முதலமைச்சருக்கு அரசு ஊழியர்கள் நன்றி தெரிவித்திருந்தனர்.
