×

போடி அருகே டாப் ஸ்டேஷன் வட்டவடை இடையே ரூ.7 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரம்

*ஜனவரி இறுதிக்குள் பணிகள் நிறைவடையும்

*நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

போடி : போடி அருகே கேரளா மாநில எல்லையான டாப் ஸ்டேஷன் வட்டவடை இடையே ரூ.7 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப்பணியில் போடி மாநில நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.போடி அருகே மேற்கு மலை தொடர்ச்சியில் கொட்டகுடி கிராம ஊராட்சியில் அடகுபாறை, நரிபட்டி, பிச்சாங்கரை, குரங்கணி, கொழுக்குமலை, முட்டம், மேல் முட்டம், கீழ்முட்டம், முதுவாக்குடி, சென்ட்ரல் ஸ்டேஷன், டாப் ஸ்டேஷன் என மலை கிராமங்கள் உள்ளன.

இந்த மலைப்பகுதியில் காபி, மிளகு, ஏலக்காய், தேயிலை, தென்னை இலவு, மா, எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா, நெல்லி உள்ளிட்ட பல்வேறு நாட்டு பயிர், மற்றும் மலைப்பயிர்கள் பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.போடியிலிருந்து குரங்கணி வழியாக உச்சி மலையில் உள்ள டாப் ஸ்டேஷன் வரை 40 கி.மீ தொலைவு தூரம் உள்ளது.

ஆனால் குரங்கணியிலிருந்து டாப் ஸ்டேஷன் வரையில் 11 கி.மீ ஒத்தையடி பாதையாகவே இருக்கிறது. ஆனால் முதுவாக்குடி வரையில் 4 கி.மீ தூரம் வரை சாலை அமைத்து ஜீப் செல்லும் சாலையாக இருக்கிறது.

இந்த மலைப்பகுதி ஏற்கனவே சுற்றுலாத்தலமாக அறிவித்து சுற்றுலா பயணிகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து இங்கு வருகை தந்து டிரக்கிங் சென்றனர். 2017ம் ஆண்டு டிரக்கிங் சென்ற 23 பேர் கொழுக்குமலை ஒற்றை மரத்து பகுதியில் தீயில் கருகி இறந்த சம்பவம் எதிரொலியாக சுற்றுலாதலம் தடை செய்யப்பட்டது.

தற்போது, குரங்கணியிலிருந்து முட்டம் வரையில் கைடு மூலமாக டிரக்கிங் செல்கின்றனர். இதற்கிடையில் டாப் ஸ்டேஷன், வட்டவடை, திருக்கோவிலூர் என மலைக் கிராமங்களுக்கு செல்வதற்கு போடியிலிருந்து போடி மெட்டு, பூப்பாறை, மூணாறு சென்று பின்பு அங்கிருந்து அருவிகாடு, குண்டளை, மாட்டுப்பட்டி வழியாக டாப் ஸ்டேஷன் பஸ்ஸில் மாறும் வாகனங்களில் சென்று மேற்படி கிராமங்களுக்கு செல்லும் நிலை இன்றும் நீடித்து வருகிறது.

இந்நிலையில் டாப் ஸ்டேஷன் மற்றும் வட்டவடை இடையே 3 கிலோ மீட்டர் தூரம் கேரளா எல்லையில் தமிழ்நாடு சாலையாக இருக்கிறது. இச்சாலையை போடி மாநில நெடுஞ்சாலை துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த சாலை ஏற்கனவே ஐந்தரை மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டு தொடர்ந்து வாகன போக்குவரத்தின் பயன்பாட்டில் இருக்கிறது.

தொடர்ந்து இப்பகுதிகள் யாவும் சுற்றுலாத்தலமாக இருப்பதால் அதிகளவு சுற்றுலா வாகனங்கள் உட்பட கேரள அரசு பஸ்களும் தமிழக வாகனங்களும் அதிக அளவு இச்சாலையில் செல்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக தார்ச்சாலையாக போடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இப்பகுதியில் வருடம் 8 மாதம் வரை அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்வதால் சாலை பழுதாகி குண்டும் குழியாக மாறி போக்குவரத்துக்கு பயன்படாமல் உள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் ஓட்டுநர்கள் சாலை விரிவாக்கம், மழைநீர் கடந்து செல்லும் வடிகால்கள், சாலை குறுக்கே மழைநீர் கடக்கும் பாலங்கள், தார்ச்சாலை புதுபிக்க வேண்டும் என போடி மாநில நெடுஞ்சாலை துறையில் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் வாகனங்கள் அதிகரிப்பு, மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் அறிக்கையாக அனுப்பினர்.

இதனை ஏற்று தமிழக அரசு ஒருங்கி ணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் வாயிலாக ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாலை விரிவாக்கம் தார்ச்சாலை புதுபிப்பு உள்ளிட்ட பணிகள் செய்ய உத்தரவிட்டது.அதன்படி கடந்த மாதத்திலிருந்து டாப் ஸ்டேஷன் வட்டவடை இடையே தமிழக சாலை மூன்று கிலோ மீட்டர் தூரம் இருக்கும் ஐந்தரை மீட்டராக உள்ள சாலையினை மேலும் ஏழு மீட்டராக விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஜேசிபி இயந்திரம் கொண்டு ஒன்றரை மீட்டர் அளவு சாலை ஓரத்தில் பாறை பகுதிகளில் பாறைகள் உடைத்தும், மண் பகுதியாக இருக்கும் இடத்தில் மண் சுரண்டி எடுத்தும் ஒன்றரை மீட்டர் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே மழை பெய்வதால் மழைநீர் சாலையில் தேங்காமல் இருக்க சாலை ஓரத்தில் வடிகால் வாறுகால் அமைத்தும், சாலையின் குறுக்கே மழை நீர் கடந்து செல்ல 11 இடங்களில் சிமெண்ட் குழாய் பாலம் அமைக்கும் பணியும், மேலும் சாலை ஓரத்தில் 130 மீட்டர் நீளம் தடுப்புச் சுவர்கள் கட்டுமான பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

இதற்கான கட்டுமான பொருட்கள் யாவும் போடியில் இருந்து லாரிகளின் வாயிலாக அங்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு ஜே.சி.பி இயந்திரங்களும் 15 தொழிலாளர்களும் விரிவாக்கப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அனைத்து பணிகள் நிறைவானவுடன் இறுதியாக தார்ச்சாலை புதுப்பிக்கும் பணியுடன் நிறைவு பெறும்,ஜனவரி இறுதிக்கு ள் நிறைவு பெறும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கேரள எல்லையில் தமிழக சாலையில் 7 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் பணிகளை தேனி கோட்ட பொறியாளர் குமணன், போடி உதவி கோட்ட பொறியாளர் இளம்பூரணம், உதவி பொறியாளர் ராஜாராம் ஆகியோர் தற்போது நடந்து வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : Top Station ,Vatavade ,Bodi ,Highways Department ,Bodi State Highways Department ,Kerala ,Bodi… ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...