- தோட்டக்கலை துறை
- உடுமலை
- உதவி இயக்குனர்
- தோட்டக்கலை
- குடிமங்கலம் துறை
- மாவட்டம்
- செல்வகுமார்
- குடிமங்கலம் மாவட்டம்
*தோட்டக்கலைத்துறை விளக்கம்
உடுமலை : குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் செல்வகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:குடிமங்கலம் வட்டாரத்தில், தக்காளி பிரதான சாகுபடி பயிராக உள்ளது. தற்போது, ராபி பருவத்தில் அதிகளவில் தக்காளி சாகுபடி நடைபெற்று வருகிறது.
கடந்த சில வாரங்களாக பனிபொழிவு மற்றும் குளிர் காரணமாக, அதிகளவில் வைரஸ் நோய் தாக்குதல் காணப்படுகிறது. புதிதாக வளரும் தக்காளி செடியின் இலைகள் சுருண்டு, தாவரத்தின் வளர்ச்சி குறைந்தும், புதிய இலைகள் அளவில் குறைந்து சுருங்கி, நரம்புகள் மஞ்சள் நிறமாகி, இலைகள் மேல்நோக்கி சுருண்டு பார்ப்பதற்கு கிண்ணம்போல் உள்ளது.
ஒருங்கிணைந்த முறையில் நோயினை கட்டுப்படுத்த, விளைநிலங்களை சுற்றி வேலிப்பயிராக மக்காச்சோளம், சோளம் போன்ற தானியப்பயிர்கள் பயிரிட வேண்டும். வரப்பு ஓரங்களில் செண்டுமல்லி நடவும், ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் ஃப்ளோரசென்ஸ் கொண்டு விதை நேர்த்தி செய்யலாம். பூச்சி நோய் தாக்குதல் இல்லாத தரமான நாற்றுகளை தேர்வுசெய்து நடவு செய்யவும். மஞ்சள் ஒட்டும் பொறி எக்டருக்கு 12 என்ற அளவில் வயலில் வைத்து நோய் பரப்பும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். வயலில் களைகளை நீக்கி சுத்தமாக வைக்க வேண்டும்.
நோய் பரப்பும் பூச்சிகளை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு மாலத்தியான் 50 ஈஸி 1.5 மில்லி வீதம் அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு மெத்தில் டெமெட்டான் 25 ஈஸி 1 மில்லி வீதம், அல்லது 10 லிட்டர் தண்ணீருக்கு தியாமெத்தோக்சம் 25 டபில்யூஜி 4 மில்லி வீதம் அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு சயண்ட்ரானி லிப்ரோல் 10.26 ஓடி, 1.8 மில்லி வீதம் அல்லது 10 லிட்டர் தண்ணீருக்கு இமிடா குளோரைடு 3 மில்லி வீதம், அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஸ்பைரோமெசிஃபென் 22.9 எஸ்சி, 1.25 மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம்.
மேலும், பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் ‘‘ராபி- 2025’’ பருவத்திற்கு தக்காளி பயிருக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம். ஒரு எக்டர் தக்காளி பயிருக்கு, ரூ.3909 பிரீமிய தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் தக்காளி பயிருக்கு காப்பீடு செய்ய இந்த மாதம் 31ம் தேதி கடைசி நாளாகும். விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் பொது சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
