*தடுக்க முயன்ற 11 பேர் கைது
தியாகராஜநகர் : பாளை தியாகராஜநகர் நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்து இருந்த விநாயகர் கோயில் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கும் பணி நேற்று தொடங்கியது. இதை தடுக்க முயன்ற 11 பேரை போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்தனர்.
பாளை தியாகராஜநகர் நெடுஞ்சாலையில் சித்தி விநாயகர் கோயில் கட்டப்பட்டிருந்தது. இதனை கோயில் பக்த சேவா சங்க தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் வாகை கணேசன், பொருளாளர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கவனித்து வந்தனர்.
இந்நிலையில் இக்கோயில் நெடுஞ்சாலைத்துறை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பு கோயில் கட்டிடத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இதன்படி நெல்லை நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து நில அளவை மேற்கொண்டு ஆக்கிரமிப்பை உறுதி செய்தனர். இதை தொடர்ந்து கோயிலை நிர்வகிப்பவர்களுக்கு ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்ற நெடுஞ்சாலைத்துறை சார்பில் 3 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
30.12.25வரை 3 முறை நோட்டீஸ் அனுப்பியும் அகற்றப்படாததால் நெடுஞ்சாலை விதிகளுக்கு உட்பட்டு 9ம்தேதி (நேற்று) பகல் 11 மணிக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என மீண்டும் நோட்டீஸ் அனுப்பினர். இதை எதிர்த்து கோயில் பக்த சேவா சங்கத்தினர் நேற்று முன்தினம் கோயில் முன் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக அறிவித்தப்படி இக்கோயிலுக்கு பாளை தாசில்தார் இசைவாணி, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் சண்முகநாதன், மேலப்பாளையம் போலீஸ் துணை கமிஷனர் கண்ணதாசன், பெருமாள்புரம் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், ஆர்ஐ பழனிகுமார் மற்றும் தீயணைப்பு படையினர், மின்வாரியத்தினர் உள்ளிட்ட அலுவலர்கள், போலீசார் நேற்று பகல் 11 மணிக்கு சென்று ஆக்கிரமிப்பு கோயில் கட்டிடத்தை அகற்ற முற்பட்டனர்.
அப்போது அங்கு இருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து கோயில் முன்பகுதியில் தரையில் அமர்ந்தனர். தடுக்க முயன்ற 11 பேரை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர். தொடர்ந்து பிற்பகல் சுமார் 1.30 மணிக்கு கோயில் கட்டிடத்தின் முன் பகுதிகள் பொக்லைன் உதவியுடன் இடித்து அகற்றும் பணி நடைபெற்றது. கோயில் பிரதான கட்டிடத்தை இடிக்க முற்பட்ட போது மீண்டும் சிறிது நேரம் வாக்குவாதம் செய்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் விநாயகர் சிலையை தாங்களே அகற்றிக்கொள்வதாக தெரிவித்தனர். அதன்படி அவகாசம் அளித்து அதிகாரிகள் மாலையில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இன்று 10ம்தேதி மீண்டும் 2வது நாளாக ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.ஆக்கிரமிப்பு அகற்றும் போது அங்கு பரபரப்பு நிலவியதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதுடன், போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தினர்.
