கிண்டி கத்திப்பாரா சந்திப்பு முதல் கோயம்பேடு வரையுள்ள முக்கிய பிரதான சாலைகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது

 

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கிண்டி கத்திப்பாரா சந்திப்பு முதல் கோயம்பேடு வரையுள்ள ஜவஹர்லால் நேரு 100 அடி சாலை உள்ளிட்ட முக்கிய பிரதான சாலைகளில் நேற்று (08.01.2026) இரவு ஒட்டு மொத்தத் தூய்மைப் பணிகள் (Deep Cleaning) மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தினசரி சராசரியாக 6,300 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் சராசரியாக நாளொன்றுக்கு 1000 மெட்ரிக் டன் கட்டட இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. தூய்மைப் பணிகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளும் நடவடிக்கையாக குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பேருந்து நிறுத்தங்கள், சாலைகள், பாலங்கள், மயானபூமிகள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், 05.01.2026 அன்று பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 1,373 பேருந்து நிறுத்தங்களிலும், 06.01.2026 அன்று 781 பூங்காக்களிலும் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தடையற்ற போக்குவரத்திற்கு ஏற்றவகையிலும், பாதசாரிகள் நடைபாதைகளை எவ்வித இடையூறுமின்றி முழுமையாக பயன்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் சுகாதாரத்தை காத்திடும் வகையிலும் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலைகளில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு ஒட்டுமொத்தத் தூய்மைப் பணி நேற்று 08.01.2026 இரவு மேற்கொள்ளப்பட்டது. இதில் கிண்டி கத்திப்பாரா சந்திப்பு பகுதியிலிருந்து கோயம்பேடு வரையுள்ள ஜவஹர்லால் நேரு 100 அடி சாலை, கத்திப்பாரா சந்திப்பு முதல் விமான நிலையம் செல்லும் சாலை, கோயம்பேடு முதல் மதுரவாயல் வரையிலான சாலை, அடையாறு மற்றும் பெருங்குடி கிழக்குக் கடற்கரைச் சாலை, வேளச்சேரி-தாம்பரம் பிரதான சாலை, ஆலந்தூர், கோட்டூர்புரம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட முக்கியப் பிரதான சாலைகளில் ஒட்டு மொத்தத் தூய்மைப்படுத்தும் பணி (Deep Cleaning) மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒட்டு மொத்தத் தூய்மைப் பணியில் சாலைகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல், மண் மற்றும் மண் துகள்கள், கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள், சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள், சாலையில் இருந்து கடைகளுக்கு இணைப்பாக போடப்பட்டுள்ள கட்டட இடிபாட்டுக் கழிவுகள், தேவையற்ற பொருட்கள், கேட்பாரற்று நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள், கேபிள் ஒயர்கள், தெருவிளக்கு அருகில் உள்ள மரக்கிளைகள் ஆகியவற்றை அகற்றி, நடைபாதைகளில் நீர் தெளித்து சுத்தம் செய்தல் உள்ளிட்ட ஒட்டுமொத்தத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியினை கண்காணித்து சிறப்பாக மேற்கொள்ள உரிய பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களது மேற்பார்வையில் இந்த ஒட்டு மொத்தத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

Related Stories: