2 குழந்தைக்கு தந்தையை திருமணம் செய்வேன் என அடம்; சேலத்தில் மருத்துவ மாணவி கொலையில் பரபரப்பு தகவல்கள்

சேலம்: சேலத்தில் மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. திருமணமாகி 2 குழந்தைக்கு தந்தையாக உள்ளவரை திருமணம் செய்வேன் என அடம் பிடித்ததால் கோபம் அடைந்த தந்தை கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை பிடிக்க தனிப்படையினர் சென்னை சென்றுள்ள நிலையில், அவர் வளர்ப்பு தந்தை என்பதும் தெரியவந்திருக்கிறது.

சேலம் அடுத்த சித்தர்கோயில் அருகில் தனியார் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு திருநெல்வேலி பக்கமுள்ள வீரவநல்லூர் பாரதிநகரை சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகள் வர்ஷினி (22) இறுதியாண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி அருகேயுள்ள நல்லாம்பட்டி நாயக்கன்பட்டியில் லட்சுமணன் என்பவரின் அடுக்குமாடி வீட்டில் தோழியுடன் அறை எடுத்து தங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று காலையில் அவர் தங்கியிருந்த அறையில் வர்ஷினி சடலமாக கிடந்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அவரது அறை வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் அவரது தந்தை வரதராஜன், சம்பவத்தன்று அவரை பார்க்க வந்து சென்றதுடன், அவரது செல்போன் சுவிட்ச்ஆப் ஆகியதும் சந்தேகத்தை வலுப்படுத்தியது.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் திருநெல்வேலியில் இருந்து நேற்று இரவு தாய் உஷா சேலம் வந்தார். அவர் மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. வரதராஜன் சாதாரண நெசவு தொழிலாளி. உஷாவுக்கு ஏற்கனவே இன்னொருவருடன் திருமணமானது. அவருக்கு பிறந்தவர் தான் வர்ஷினி. குழந்தையாக இருக்கும்போது அவரது தந்தை பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகு வரதராஜன் உஷாவை திருமணம் செய்துகொண்டார். அப்போது வர்ஷினிக்கு 4 வயதாகும். இந்த குழந்தையை தனது குழந்தையாகவே வளர்த்து வந்தார். உஷாவுக்கும் வரதாஜனுக்கும் குழந்தைகள் இல்லை. வர்ஷினியின் சான்றிதழ் உள்ளிட்ட எல்லா ஆவணங்களிலும் தந்தை இடத்தில் வரதராஜன் தான் இருக்கிறார். கடினமான சூழ்நிலையிலும் மகளை நன்றாக படிக்க வைத்தார்.

இந்நிலையில் கடந்த ஒரு மாத அளவில் வர்ஷினி, ஒருவருடன் பழகி வந்தது பெற்றோருக்கு தெரிய வந்தது. அதே நேரத்தில் ஒருவருடன் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. அது வரதராஜனுக்கு தெரியவந்தது. இதனால் அவர் கடும் அதிர்ச்சியடைந்தார். அது யார்? என விசாரித்தபோது அந்த நபர் திருநெல்வேலி பக்கமுள்ள வி.கே.புரத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவருக்கு திருமணாகி 2 குழந்தைகள் உள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிடம் பேசினர். படிப்பு முடிந்ததும் நல்ல மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்தனர். ஆனால் அதனை வர்ஷினி ஏற்றுக் கொள்ளவில்லை. காதலிப்பவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்பதில் உறுதியாக இருந்தார். கிறிஸ்துமஸ்-புத்தாண்டு லீவுக்கு திருநெல்வேலிக்கு சென்றார். ஆனால் அவர் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்லவில்லை. பின்னர் அங்கிருந்து சேலத்திற்கு நேற்று முன்தினம் வந்துள்ளார்.

வர்ஷினி காலை சேலம் வந்த நிலையில் மாலையில் அவரது தந்தை வரதராஜன் சேலத்திற்கு வந்தார். மகள் தங்கியிருந்த அறைக்கு சென்று சமாதானம் செய்துள்ளார். திருமணமான வரை திருமணம் செய்தால் வாழ்க்கை வீணாகிப்போய்விடும் என கெஞ்சியுள்ளார். ஆனால் அவர் விடா பிடியாக இருந்த நேரத்தில் கோபம் அடைந்த வரதராஜன் திடீரென மகளை தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டு, கதவை வெளிப்புறமாக தாழிட்டுவிட்டு சென்னைக்கு தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது. அவரது மனைவி உஷாவிடம் சென்னைக்கு செல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர். மாணவி வர்ஷினியின் உடல் பிரேத பரிசோதனை இன்று காலை நடந்து தாயிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையின் முடிவில் தான் வர்ஷினி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்யப் பட்டாரா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: