- ஆதிமுகா-பமகா
- எடப்பாடி
- அமித் ஷா
- தில்லி
- டிடீவி
- சென்னை
- அன்புமணி
- எடப்பாடி பழனிசாமி
- Bamaka
- உச்ச கூட்டணி
- பல்மகாவா
- அட்டெமுகா
சென்னை: எடப்பாடி பழனிசாமியை நேற்று அன்புமணி சந்தித்து பேசினார். இதையடுத்து அதிமுக கூட்டணியில் அன்புமணி பாமக இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 17 சட்டப்பேரவை தொகுதியும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், 25 எம்எல்ஏ சீட், ஒரு ராஜ்யசபா சீட் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரனை சேர்க்க வேண்டும் என்று டெல்லிக்கு எடப்பாடியை அழைத்து அமித்ஷா உத்தரவிட்டு அனுப்பியுள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜ, காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தற்போதே தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன.
திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக-பாஜ அணி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி என 4 அணிகளாக களம் காண்கின்றன. அதிமுக கூட்டணியில் பாஜ உள்ளது. அதிமுக தனது கூட்டணிக்குள் பாமக மற்றும் தேமுதிகவை கொண்டு வர விருப்பப்படுகிறது. அதற்கான மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதேவேளையில், இப்போது கூட்டணியில் உள்ள பாஜவுக்கு எத்தனை சீட்டுகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் அந்த கட்சியினரிடையே ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக தலைவர் அன்புமணி நேற்று காலை திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் ஜெயக்குமார், வழக்கறிஞர் பாலு, திலகபாமா ஆகியோர் உடனிருந்தனர். பாமக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணி குறித்து அன்புமணி பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த முறை அதிமுக கூட்டணியில் 23ல் போட்டியிட்டு 5 தொகுதிகளில் பாமக வென்றிருந்தது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியபோது, “வருகிற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜ ஏற்கனவே கூட்டணி அமைத்துள்ளது. தற்போது பாமக (அன்புமணி பாமக) கூட்டணியில் இணைந்துள்ளது. விரைவில் மேலும் சில கட்சிகள் சேருவார்கள். எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி.
அதிமுக தொண்டர்கள் விரும்பியபடி கூட்டணி அமைத்துள்ளோம். இது வெற்றி கூட்டணி. வலிமையான தமிழகத்தை உருவாக்க, மக்களுக்கான திட்டங்களை கொடுக்க, 234 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறுவோம். தேனீக்கள் போல செயல்பட்டு மிகப்பெரிய வெற்றி பெறுவோம். தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்துவிட்டோம். மற்றதை பின்னர் அறிவிப்போம்” என்றார். அன்புமணி கூறும்போது, ‘பாமக தொண்டர்கள் எதிர்பார்த்த வலுவான கூட்டணி அமைந்துள்ளது.
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெருவாரியான தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கும்’ என்றார். பாமக நிறுவனர் ராமதாஸ் உடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, வணக்கம் கூறிவிட்டு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்காமல் சென்றார். அதேநேரம் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவிடம் 25 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என்று அன்புமணி தரப்பு கேட்டுள்ளது. தற்போது 17 சட்டப்பேரவை தொகுதியும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்க முன்வந்துள்ளனர்.
தற்போது பாமக இரண்டாக உடைந்துள்ளதால் அவ்வளவுதான் தற்போது ஒதுக்க முடியும். ஒரு ராஜ்யசபா சீட்டும் உடனடியாக தர முடியாது. பிப்ரவரியில் 2 சீட் காலியாகிறது. அதில் தம்பிதுரை, வாசன் ஆகியோர் மீண்டும் சீட் வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஒரு சீட்டை தேமுதிகவுக்கு தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த முறை ஒரு சீட் எங்களுக்கு வேண்டும். அடுத்த முறை ராஜ்யசபா சீட் தருகிறோம் என்று எடப்பாடி கூறியுள்ளார். ஆனால் அன்புமணியோ, இந்த முறை ராஜ்யசபா கொடுங்கள்.
அதை நாங்கள் சவுமியாவை நிறுத்த திட்டமிட்டுள்ளோம். பென்னாகரத்தில் ஜி.கே.மணியை எதிர்த்து போட்டியிடப்போகிறேன் என்ற கூறியுள்ளார். இதனால் பேச்சுவார்த்தை முடியவில்லை. ஆனால் அமித்ஷா இருவருக்கும் உத்தரவிட்டதால், இருவரும் தொகுதியை முடிவு செய்யாமல் கூட்டணிக்கு மட்டும் சம்மதம் தெரிவித்து விட்டனர். இந்நிலையில், திருச்சி வந்த அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி திட்டமிட்டார்.
ஆனால் கூட்டணியை இறுதிப்படுத்தாமல் தன்னை சந்திக்கக் கூடாது என்று அமித்ஷா கூறிவிட்டதால், சந்திக்காமல் இருந்தார். தற்போது அன்புமணி பாமக மட்டும் சேர்ந்துள்ளது. தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் முடிவு எடுப்பதற்காக டெல்லி வரும்படி அமித்ஷா, எடப்பாடியை அவரசமாக அழைத்துள்ளார்.
இதனால் நேற்று மதியம் 2.30 மணியளவில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு சென்றார். நேற்று இரவு 10 மணிக்கு அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் ஆகியோரை கண்டிப்பாக கூட்டணியில் சேர்க்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை நீங்கள்தான் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும், வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டு விட்டு வீட்டில் இருந்து வெளியில் வந்துள்ளார். இன்றும் எடப்பாடி டெல்லியில் தங்கியிருக்கிறார். பிற்பகலில் சென்னை திரும்புகிறார். அதன்பின்னர்தான் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்ப்பது, டிடிவியை கூட்டணியில் சேர்ப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* எடப்பாடியை எதிர்த்தவர் எடப்பாடியுடன் கூட்டணி
எடப்பாடி பழனிசாமியால் பழிவாங்கப்பட்டு கட்சியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டவர்கள்தான் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி.தினகரன். இவர்கள் இருவரும் பழனிசாமியை முதல்வர் வேட்பாளர் பதவியில் இருந்து மாற்றினால்தான் கூட்டணி என்றவர்கள், கடந்த சில நாட்களாக அமைதியாக உள்ளனர். அவர்கள் இருவரையும் பாஜ மேலிடம் எச்சரித்ததால்தான் அமைதியாகிவிட்டனர் என்று கூறப்படுகிறது.
அதில், ஓ.பன்னீர்செல்வம் அதிமுக உரிமை மீட்டு இயக்கம் என்ற பெயரில் இயக்கம் நடத்தி வருகிறார். அவர் அதிமுகவில் சேர கடுமையாக முயன்றார். ஆனால், எடப்பாடியோ கட்சியில் சேர்க்க முடியாது என்று மறுத்து விட்டார். கூட்டணியில் சேர்க்க சம்மதித்துள்ளார். இதனால் அதிமுக உரிமை மீட்பு இயக்கத்தை அதிமுக உரிமை மீட்பு கழகமாக மாற்றி கட்சியாக பதிவு செய்ய முடிவு செய்துள்ளார்.
அதிமுகவில் எடப்பாடியிடம் உள்ள உரிமையை மீட்கத்தான் இயக்கம் தொடங்கினார். தற்போது அந்த எடப்பாடியிடமே கூட்டணி சேர்ந்து, அவரை எதிர்பதற்கான பெயரிலான கட்சியை நடத்த வேண்டிய நிலை தற்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு உருவாகியுள்ளது. இப்போது கூட்டணியாக மேடையில் எடப்பாடியின் அருகில் அமர்ந்து கொண்டு அவரிடம் இருந்து உரிமையை மீட்க வேண்டிய நிலைதான் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் அதிமுகவினர்.
