- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- உதவி முதலமைச்சர்
- ஸ்டாலின்
- திருவள்ளிகேனி சட்டமன்றத் தொகுதி
சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நியாயவிலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் 3,000 ரூபாய் ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வேட்டி, சேலைகளை வழங்கினார். உலகில் பல திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வந்தாலும், விவசாயத்திற்கு உயிர்நாடியாக விளங்கும் சூரியனுக்கு அறுவடைக் காலத்தில் நன்றி தெரிவிக்கும் இயற்கையை கொண்டாடுகின்ற விழாவாக பொங்கல் திருவிழா தமிழர்களால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக கொண்டாப்பட்டு வருகின்றது. பொங்கல் திருவிழாவானது விவசாயம் செழிக்க காரணமான சூரியனுக்கு மட்டுமல்லாது விவசாயம் செய்ய தங்களோடு உழைத்த மாடுகளுக்கும் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை பொதுமக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கப்படும் எனவும், பொங்கல் திருநாளை மேலும் சிறப்பாக கொண்டாட 3,000 ரூபாய் வழங்கப்படும்” எனவும் அறிவித்து இன்று பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதை தொடங்கி வைத்தார்கள். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (8.1.2026) சென்னை, சிந்தாதரிப்பேட்டை உலகப்பா மேஸ்திரி தெருவில் செயல்பட்டு வரும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் 3,000 ரூபாய் ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வேட்டி, சேலைகளையும் வழங்கினார்.
மேலும், சிந்தாதரிப்பேட்டை அருணாசலம் தெருவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அமுதம் நியாய விலைக் கடை மற்றும் ராயப்பேட்டையில், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் ராயப்பேட்டை 5 நியாய விலைக் கடை ஆகியவற்றில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.3000/-ம் ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வேட்டி, சேலைகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) திரு.நே.சிற்றரசு, மண்டலக்குழுத் தலைவர் திரு.எஸ். மதன்மோகன், கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் திருமதி கி. கவிதா, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை துணை ஆணையர் திருமதி கோ. லட்சுமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டனர்.
