வாஷிங்டன்: ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் 500 சதவீத வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இது இந்தியாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளை தண்டிக்க அமெரிக்காவுக்கு அனுமதிக்கும் தடை மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் கொண்டு வரப்படுகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் டிரம்ப் ஒப்புதல் கொடுத்துவிடுவார். இதன் மூலம் இந்தியா மற்றும் சீனாவுக்கான வரிகளை 500 சதவீதம் வரை அமெரிக்காவால் உயர்த்த முடியும். டிரம்ப்பின் குடியரசு கட்சியை சேர்ந்த லிண்ட்சே கிரஹாம் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த ரிச்சர்ட் ப்ளூமென்டல் ஆகியோர் இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளனர். இந்த மசோதா மட்டும் நிறைவேறினால் அது டிரம்ப்பிற்கு மிகப் பெரிய அதிகாரத்தை கொடுக்கும்.
இந்த மசோதாவை தாக்கல் செய்ய டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக குடியரசு கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘அதிபர் டிரம்ப்புடன் பல்வேறு பிரச்னைகள் குறித்து மிகவும் பயனுள்ள ஒரு சந்திப்பு நடைபெற்றது. நானும் செனட்டர் ப்ளூமென்டாலும் பலருடன் இணைந்து மாத கணக்கில் பணியாற்றி வந்த மசோதாவுக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். உக்ரைன் அமைதிக்காக இறங்கி வரும் நேரத்தில், புதின் வெறு வாய் வார்த்தைகளை மட்டும் பேசி, அப்பாவி மக்களை கொன்று வருவதால், சரியான நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதினின் போர் இயந்திரத்துக்கு எரிபொருளாக அமையும் மலிவான ரஷ்ய எண்ணெய்யை வாங்கும் நாடுகளை தண்டிப்பதற்கு இந்த மசோதா டிரம்ப்புக்கு அதிகாரம் அளிக்கும். ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தும்படி, சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளை கட்டாயப்படுத்துவதற்கு இந்த மசோதா டிரம்ப்புக்கு மகத்தான செல்வாக்கை வழங்கும். அடுத்த வாரமே இரு கட்சிகளின் வலுவான ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
