×

கோழி, ஆடுகளுக்கு எல்லாம் உயிர் இல்லையா? : தெருநாய்கள் ஆதரவாளர்களுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி : பிற விலங்குகளுக்கு உயிர் இல்லையா? கோழிகள், ஆடுகள் வாழ வேண்டாமா?’ என்று தெருநாய்கள் ஆதரவாளர்களுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நாட்டின் தலைநகரான புது டெல்லியில் தெரு நாய்கள் கடித்து ரேபிஸ் நோய் ஏற்படுவதாக, குறிப்பாக சிறாா்கள் அந்த நோயால் பாதிக்கப்படுவதாக ஊடகத்தில் வெளியான தகவலைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், கல்வி நிறுவன வளாகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் பொது நிறுவன வளாகங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் விடவேண்டும் என்று கடந்த ஆண்டு நவ. 7ம் தேதி உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, நாய் வளர்ப்பவர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் ஒரு தரப்பினராகவும், தெருநாய்களை கட்டுப்படுத்தக்கோரி மனு தாக்கல் செய்தவர்கள் மற்றொரு தரப்பினராகவும் ஆஜராகி வாதமிட்டனர். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘பிற விலங்குகளின் உயிர்களின் நிலை என்ன?. கோழிகள், ஆடுகள் வாழ வேண்டாமா?. சாலைகளில் தெருநாய்கள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும். நாய்கள் கடிக்காமல் இருக்கலாம், ஆனால், அதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. சாலைகள், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் அருகே நாய்கள் இருப்பதால் என்ன பயன்?. தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைப்பதால் எந்த பலனும் இல்லை. நாய்கள் காப்பகம்தான் இனப்பெருக்கத்தின் கூடாரமாக இருக்கிறது,”இவ்வாறு தெரிவித்து வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

Tags : Supreme Court ,Delhi ,New Delhi ,
× RELATED 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3...