புதுடெல்லி: டெல்லியில் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு வீட்டில் குத்தகைக்கு தங்கி இருந்த நபர் ஒருவர், தன் அந்தரங்க உறுப்பை நான்கு வயது சிறுமியை தொட செய்துள்ளார். இதுகுறித்த வழக்கில் அந்த நபர் குற்றவாளி என்று கடந்த 2024ம் ஆண்டு தீர்ப்பளித்த டெல்லி நீதிமன்றம், அவருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி பன்சால் கிருஷ்ணா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பன்சால் கிருஷ்ணா தீர்ப்பளித்தார்.
அப்போது, “சிறு குழந்தைகளை பாலியல் நோக்கத்துடன் ஒருவரின் அந்தரங்க உறுப்புகளை தொட வைப்பது என்பது மோசமான பாலியல் வன்கொடுமைக்கு சமம். போக்சோ சட்டத்தின்கீழ், பன்னிரண்டு வயதுக்குள்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அனைத்துமே பாலியல் வன்கொடுமைக்கு சமம்” என தெரிவித்தார்.
