டேராடூன்: உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் யோகேஷ் குமார் நேற்று வெளியிட்ட சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது: காசோலை மோசடி வழக்குகளில் இனி பாரம்பரிய முறைகள் மூலமாக மட்டுமே சம்மன் அனுப்பப்படாது. இமெயில், வாட்ஸ்அப் போன்ற குறுஞ்செய்தி செயலிகள் மூலமாகவும் சம்மன் அனுப்பலாம். புகார் தாக்கல் செய்யும் போது, புகார்தாரர், குற்றம் சாட்டப்பட்ட நபரின் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் விவரங்களை பிரமாணப் பத்திரத்துடன் வழங்க வேண்டும்.
ஒவ்வொரு புகாருடனும் அதன் சுருக்கமான விவரம் இணைக்கப்பட வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விரைவான நிவாரணம் வழங்கும் வகையில், நீதிமன்றம் ஆன்லைன் கட்டண வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கு விவரங்களை உள்ளிட்டு காசோலை தொகையை நேரடியாகச் செலுத்த முடியும். குற்றம் சாட்டப்பட்டவர் இந்த வசதி மூலம் பணம் செலுத்தினால், சமரசத்தின் அடிப்படையில் நீதிமன்றம் வழக்கை முடித்து வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
