சென்னை: ரயில்வே பாதுகாப்பான ஆணையர் விரைந்து அனுமதி வழங்காமல் இழுத்து அடிப்பதால் சென்னை வேளச்சேரி, பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னை பறக்கும் ரயில் சேவையை வேளச்சேரியிலிருந்து செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை நீட்டிக்கும் பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன. ரூ.734 கோடி செலவில் 4.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. இந்த வழித்தடத்தில் புழுதிவாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் என இரண்டு புதிய ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் இந்த திட்டப் பணிகள் நிறைவடைந்தன.
அதன் பிறகு டீசல் என்ஜின் மூலம் இயங்கும் சரக்கு ரயில்களைக் கொண்டு பலமுறை சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. நீட்டிப்புப் பணிக்கான பாதுகாப்புச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வழித்தடத்தில் சேவையைத் தொடங்குவதற்கு, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நடத்தும் சோதனை ஓட்டத்திற்குப் பிறகு பாதுகாப்பு சான்றிதழ் பெறவேண்டும். முதலில், பொங்கல் பண்டிகைக்கு முன்பே இந்த சேவையை தொடங்க தெற்கு ரயில்வே திட்டமிட்டிருந்தது. ஆனால், ரயில்வே அதிகாரிகள் தற்போது இந்த மாதம் சேவையை தொடங்குவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விரைந்து அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதால் சென்னை வேளச்சேரி – செயின்ட் தாமஸ் மவுண்ட் பறக்கும் ரயில் சேவையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சோதனை ஓட்டத்திற்கான தேதி அறிவித்தவுடன், எம்.ஆர்.டி.எஸ்., சேவைகள் தொடங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. எந்த காலதாமதமும் இன்றி விரைந்து அனுமதி அளித்து ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்று பயணிகளும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
