திண்டுக்கல்: திண்டுக்கல்லில் புதிதாக 61 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில், ரூ.337.84 கோடியில் 111 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ரூ. 174.20 கோடி மதிப்பில் 212 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.1,082.86 கோடியில் 2,62,864 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அதில், “பிரிட்டிஷ் படைக்கு எதிராக போராடிய வேலு நாச்சியார், தங்களது அடுத்தகட்ட போராட்டத்துக்கு திட்டமிட்ட ஊர்தான் திண்டுக்கல். திப்பு சுல்தான் நடமாடிய இடம் திண்டுக்கல். திராவிட மாடல் ஆட்சியில் நான்கரை ஆண்டுகளில் 2 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் புரட்சியின் பெயர், எழுச்சியின் பெயர் வீரத்தின் பெயர். ரூ.3,500 கோடியில் திண்டுக்கல் மாவட்டத்தில் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 10,000 வீடுகள் கட்டப்படுகின்றன. தமிழ்நாட்டிலேயே திண்டுக்கல் மாவட்டத்தில்தான் அதிகப்படியான வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் ஒரு லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 4 லட்சம் பெண்கள் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 53,000 பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 1,69,000 பேர் பயன்பெற்றுள்ளனர்.
திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் சாலை தெரு விளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ரூ.14 கோடியில் நிறைவேற்றப்படும். திண்டுக்கல் மாநகராட்சி பாதளா சாக்கடை, சுத்திகரிப்பு நிலையம் ரூ.8 கோடியில் சீரமைக்கப்படும். இடும்பன்குளம், சண்முகா நதி ரூ.6 கோடியில் மேம்படுத்தப்படும். புதிய நத்தம் கலை அறிவியல் கல்லூரியில் ரூ.18.50 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும். மார்க்கம்பட்டியில் முருங்கை ஏற்றுமதிக்கான பதப்படுத்தும் தொழிற்சாலை ரூ.7 கோடியில் அமைக்கப்படும். கொடைக்கானல் மலை கிராமத்தில் 100 ஏக்கரில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் சுற்றுலா முதலீட்டு பூங்கா. ஒட்டன்சத்திரத்தில் ரூ.17 கோடி செலவில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே அமித் ஷாவுக்கு தெரியவில்லை. அமித் ஷாவா அல்லது அவர் அவதூறு ஷாவா என்று நினைக்கும் அளவுக்கு உண்மைக்கு புறம்பான தகவலை கூறியுள்ளார். திராவிட மாடல் ஆட்சியில் சுமார் 4,000 கோயில்களில் குடமுழுக்கு நடத்தியுள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.700 கோடிக்கு மேல் கோயில்களுக்காக மட்டும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இப்படி ஒரு சாதனையை பாஜக ஆளும் மாநிலங்களில் செய்துள்ளீர்களா?. இந்துக்கள் உரிமை பறிக்கப்படுவதாக உண்மைக்கு மாறான தகவலை அமித் ஷா கூறியிருப்பது அவர் பதவிக்கு கண்ணியமல்ல. தமிழ்நாட்டில் கலவரம் செய்ய வேண்டும் என்ற சிலரின் எண்ணம் ஸ்டாலின் இருக்கும் வரை நிறைவேறாது. தமிழ்நாட்டை நாம் ஆளவேண்டுமா, டெல்லியில் இருப்பவர்கள் ஆளவேண்டுமா என்பதே கேள்வி. வடமாநிலங்களை போல் தமிழ்நாட்டிலும் வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்க முயற்சிக்கிறார்கள். மக்கள் எப்போதும் அரசு பக்கம் இருக்கின்றனர்; மீண்டும் நாங்கள்தான் வருவோம். இதுவரை காணாத வளர்ச்சியை நோக்கி தமிழ்நாட்டை கொண்டு செல்வோம்,” இவ்வாறு தெரிவித்தார்.
