காரிமங்கலம், ஜன.6: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அடிலம் ஊராட்சி ஏ.சப்பாணிப்பட்டி பகுதியில், பனைமர தொழிலாளர்கள் நேற்று முன்தினம் பனைமரத்திற்கு காப்பு கட்டி பொங்கல் விழா நடத்தினர். அப்போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் குடிப்பதற்கு கள் கொடுத்துள்ளனர். இதில் சிறுமி ஒருவருக்கும் கள் கொடுத்து குடிக்க வைத்துள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில், விஏஓ விசாரணை மேற்கொண்டு, அனுமதி இல்லாமல் நிகழ்ச்சி நடத்தியதுடன், அரசு உத்தரவை மீறி கள் இறக்கி, சிறுமிக்கு குடிக்க கொடுத்தது தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் சுரேஷ் மீது, காரிமங்கலம் போலீசில் புகாரளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
