குஜராத்: இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதரா மைதானத்தில் வருகிற 11ம் தேதி நடக்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் தனித்தனியாக குஜராத்திற்கு சென்றவண்ணம் உள்ளனர். இந்நிலையில் குஜராத்தில் உள்ள ராதா-கிருஷ்ணா கோவிலில் சாமி தரசனம் செய்வதற்காக முன்னணி வீரர் ரோகித் சர்மா தனது குடும்பத்துடன் வந்திருந்தார். விமான நிலையத்தில் இருந்து நேற்று காரில் வெளியேறியபோது ரசிகர்கள் அவரின் காரை கண்டதும் ஆரவாரம் செய்தனர்.
இதையடுத்து காரின் கண்ணாடியை இறக்கி ரசிகர்களை பார்த்து ரோகித் கை அசைத்தார். அப்போது இரண்டு சிறுவர்கள் ரோஹித்தை நேரில் கண்ட மகிழ்ச்சியில் அவரின் கையை கார் கண்ணாடி வழியாக வெளியே இழுத்து செல்பி எடுக்க முயன்றனர். இதனால் கோபமடைந்த ரோகித் சர்மா உடனடியாக கையை உள்ளே இழுத்து அவர்களை எச்சரிக்கை செய்துவிட்டு கார் கண்ணாடியை மேலே இழுத்துக் கொண்டார். கார் கண்ணாடி வழியாக ரோகித்தின் கையை சிறுவர்கள் இழுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
