×

ஆஷஸ் 5வது டெஸ்ட்; டிராவிஸ் ஹெட்டின் அதிரடி சதத்தால் தலைநிமிர்ந்த ஆஸ்திரேலியா: மேத்யூ ஹேடனின் சாதனையை சமன் செய்தார்

 

சிட்னி: இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஏற்கனவே 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் ஏற்கனவே ஆஸ்திரேலியா தொடரை வென்று விட்டது. இந்தநிலையில் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. ஜோ ரூட் 160, ஹேரி பூரூக் 84 ரன்கள் குவிக்க இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா பந்துவீச்சில் மைக்கேல் நெசர் 4, போலண்ட் மற்றும் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதை தொடர்ந்து பேட்டிங் ஆடி வரும் ஆஸ்திரேலியா அணி 3ம் நாள் தேநீர் இடைவேளை வரை 6 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி 98.19 ஸ்டிரைக் ரேட்டில் 24 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உட்பட 166 பந்துகளில் 163 ரன்கள் குவித்து அவுட்டானார். கேப்டன் ஸ்மித் 65 ரன்களுடனும், கேமரூன் கிரீன் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் இங்கிலாந்தைவிட அதிக ரன்கள் குவித்து 5வது டெஸ்டில் வெற்றிபெற முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

டிராவிஸ் ஹெட் இத்தொடரில் மூன்று சதங்களை விளாசி, ஜாம்பவான் மேத்யூ ஹேடனின் சாதனையை சமன் செய்தார். ஆஸ்திரேலிய தொடக்க வீரராக இந்த மைல்கல்லை எட்டிய ஹெட்டின் கிரிக்கெட் வரலாற்றில் இது முக்கியத்துவம் பெறுகிறது. ஆஷஸ் தொடரில், தொடக்க வீரராக ஐந்து டெஸ்ட் போட்டிகளின் எட்டு இன்னிங்ஸ்களில் ஹெட் மூன்று சதங்களை விளாசியுள்ளார். ஆஷஸ் வரலாற்றில், எந்தவொரு ஆஸ்திரேலிய தொடக்க வீரரும் ஒரு தொடரில் மூன்று சதங்களுக்கு மேல் அடித்ததில்லை. அவரது இந்தச் சிறப்பான பங்களிப்பு அணிக்கு வலு சேர்த்துள்ளது. மூன்று சதங்கள் அடித்த கடைசி ஆஸ்திரேலிய தொடக்க வீரர் மாத்யூ ஹேடன்தான்.

டிராவிஸ் ஹெட் அந்தச் சாதனையை சமன் செய்து, தனது பெயரை வரலாற்றில் நிலைநிறுத்தியுள்ளார். ஹெட்டுக்கு முன், ஆறு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆஸ்திரேலிய அணிக்காக ஆஷஸ் தொடரில் மூன்று சதங்களை குவித்துள்ளனர். இதுபோல் ஆஷஸ் வரலாற்றில், இன்றுவரை ஒரேயொரு தொடக்க ஆட்டக்காரர் மட்டுமே ஒரு தொடரில் நான்கு சதங்களை அடித்து தனித்துவமான சாதனையைப் படைத்துள்ளார். இங்கிலாந்தின் ஜாம்பவான் ஹெர்பர்ட் சட்க்ளிஃப், 1924-25ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் தொடரில் ஐந்து போட்டிகளிலும் விளையாடி, எட்டு இன்னிங்ஸ்களில் மொத்தம் 701 ரன்கள் குவித்து, நான்கு சதங்களை விளாசி சாதனை படைத்தார்.

Tags : Ashes 5th ,Australia ,Travis Head ,Matthew Hayden ,Sydney ,England ,Ashes Test ,
× RELATED சில்லி பாய்ன்ட்…