டெல்லி : அமெரிக்காவின் நிர்பந்தங்களையும் மீறி, ரஷ்யாவில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் கடந்த நவம்பர் மாதம் அதிகரித்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரில் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை ரஷ்யா பயன்படுத்துவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறார். இதன் காரணமாக ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடந்த அக்டோபர் மாதம் பொருளாதாரத் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்தன.
ஆனால் இந்தியன் ஆயில் உள்ளிட்ட வேறு நிறுவனங்கள் இறக்குமதியை அதிகரித்துள்ளன. இது குறித்து பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நவம்பர் மாதத்தில் இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி அளவு 2.10 கோடி மெட்ரிக் டன்களாக உயர்ந்துள்ளது. இது கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு பதிவான கச்சா எண்ணெய் இறக்குமதியின் மிக உயர்ந்த அளவாகும். 2024 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, இறக்குமதி சுமார் 11.1% அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவு நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பேரல்களைத் தாண்டி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
மேலும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தனது மணலி சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தித் திறனை நாள் ஒன்றுக்கு 2.10 லட்சம் பேரல்களில் இருந்து 2.80 லட்சம் பேரல்களாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. இதனிடையே ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்காவிட்டால், இந்திய பொருட்கள் மீதான தற்போதைய வரிகள் உயர்த்தப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். ரஷ்ய கச்சா எண்ணெய் விவகாரத்தில் தான் மகிழ்ச்சியாக இல்லை என்பதை தனது நண்பர் மோடி உணர்ந்திருப்பார் என்றும் அதிபர் ட்ரம்ப் கூறினார்.

