டெல்லி: டெல்லி காற்று மாசு வழக்கில் காற்றுத் தர மேலாண்மைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லி என்சிஆர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க பழைய வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பாக்சி, விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது; காற்று மாசு பிரச்சனையை மிகவும் மெத்தனமாக கையாள்வதாக மேலாண்மைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
உடனடியாக வல்லுநர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டி விரிவான அறிக்கை தயாரிக்க உத்தரவிட்டனர். அறிக்கையை மக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். காற்று மாசுக்கான காரணத்தை அறிவதில் வல்லுநர்கள் வேறுபடுவதாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு கருத்து தெரிவித்தது. தொடர் நடவடிக்கைகளுக்குப் பின்பும் டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமாக இருக்கிறது. பல ஆண்டுகளாக விசாரித்தும், வல்லுநர்கள் கருத்தை கேட்ட பின்பும் காற்றின் தரத்தில் முன்னேற்றம் இல்லை. நீண்டகால தீர்வை மறு ஆய்வு செய்ய கூறியும் மேலாண்மைக் குழு வெறும் நிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்துள்ளது.
மேலாண்மைக் குழு, காற்று மாசு பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்ததாக தெரியவில்லை. நீதிமன்றம் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மேலாண்மைக் குழு எந்தப் பதிலும் அளிக்காததால் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். காற்றின் தரம் மோசமாக இருப்பதற்கான காரணம் மற்றும் நிரந்தர தீர்வு காண்பதில் குழு தீவிரம் காட்டவில்லை. தீர்வை பரிந்துரைக்காமல், டெல்லி மாநகராட்சி சுங்கச்சாவடி மூலம் வருவாய் ஈட்டுவதில் அக்கறை. வல்லுநர்கள் குழு கூட்டத்தை 2 வாரத்தில் கூட்டி காற்று மாசுக்கான காரணத்தை விவரிக்கும் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
2025 டிச.17ல் பிறப்பித்த உத்தரவில், உச்சநீதிமன்றம் சுங்கச்சாவடிகளை மூட உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
