இஸ்லாமாபாத்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தலையிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில், சீனாவின் வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீ, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றங்களை தணிப்பதில் சீனா மத்தியஸ்தம் செய்ததாக சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சீனாவின் இந்த கூற்றை பாகிஸ்தான் உண்மை தான் என்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் தாஹிர் அந்த்ராபி கூறுகையில்,‘‘சீனாவின் தலைமை பாகிஸ்தானின் தலைமையுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தது. கடந்த ஆண்டு மே 6ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலான அந்த மூன்று, நான்கு நாட்களில் அதற்கு முன்னரும், பின்னும் கூட இந்திய தலைமையுடன் சில தொடர்புகளை சீனா ஏற்படுத்தி இருந்தது. எனவே மிகவும் நேர்மறையான ராஜதந்திரப் பரிமாற்றத்தால் வகைப்படுத்தப்பட்ட அந்த தொடர்புகள் பதற்றத்தை தணித்து பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை கொண்டு வருவதற்கு பங்களித்தன என்று நான் நினைக்கிறேன். மத்தியஸ்தம் குறித்த சீனாவின் விளக்கம் சரியானது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
