டாக்கா: வங்கதேசத்தில் 3 நாட்களுக்கு முன் கொடூரமாக தாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்ட இந்து தொழிலதிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வங்கதேச தலைநகர் டாக்காவிலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ஷரியத்பூர் மாவட்டத்தில் தமுத்யா, கெயுர்பங்கா பஜார் அருகே 50 வயதான இந்து தொழிலதிபர் கோகோன் சந்திர தாஸ் கடந்த மாதம் 31ம் தேதி தனது கடையை மூடி விட்டு வீட்டுக்கு ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தார். இவர் மருந்துகடை மற்றும் மொபைல் பேங்கிங் தொழில் செய்து வந்தார்.
அப்போது திடீரென ஆட்டோவை வழிமறித்த கும்பல், கோகோனை கூரான ஆயுதங்களால் வெட்டத் தொடங்கினர். அவர் உயிர் பிழைக்க ஓடியபோதிலும் அந்த கும்பல் விரட்டி விரட்டி வெட்டியது. மேலும், அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதனால் கோகோன் அலறியபடி சாலையோரம் இருந்த குளத்தில் குதித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்ததால் அந்த கும்பல் தப்பி ஓடியது. கடுமையான தீக்காயம் மற்றும் வெட்டு காயத்துடன் மீட்கப்பட்ட கோகோன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு 3 நாள் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் நேற்று பலியானார்.
வங்கதேசத்தில் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு கடந்த ஆண்டு பொறுப்பேற்றதில் இருந்தே, அங்குள்ள சிறுபான்மையினர்களான இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. சமீபத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஹாதி என்பவர் மர்ம நபர்களால் சுடப்பட்டு இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்துக்கள் மீது கொலைவெறி கும்பல் தாக்குதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. கடந்த டிசம்பர் 18ம் தேதி தலைநகர் டாக்காவில் போராட்டம் வெடித்த போது, தீபு சந்திர தாஸ் என்ற இந்து நபர் கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு மரத்தில் கட்டி தீ வைத்து எரித்து கொல்லப்பட்டார். இதே போல, கடந்த டிசம்பர் 24ம் தேதி அம்ரித் மொண்டல் என்ற மற்றொரு இந்து நபர் கும்பல் வன்முறைக்கு ஆளாகி பலியானார். தற்போது கோகோன் சந்திர தாசும் உயிரிழந்துள்ளார். இத்தகைய தொடர் தாக்குதலால், வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையின மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது.
* 5வது இந்து நபர் பலி
இது குறித்து வங்கதேச இந்து பவுத்த கிறிஸ்தவ ஒற்றுமைக் கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் காஜல் தேப்நாத் கூறுகையில், ‘‘வங்கதேசத்தில் உள்ள தீவிரவாத குழுக்கள் சிறுபான்மை மதத்தினரை அச்சுறுத்த வெளிப்படையாக முயற்சி செய்கின்றன. 3 நாட்களாக உயிருக்கு போராடிய கோகோன் உயிரிழந்துள்ளார். டிசம்பர் மாதத்தில் சிறுபான்மையினர் மீது 7 தாக்குதல்கள் நடந்துள்ளன. ஒருவரையோ அல்லது ஒருவரின் வீட்டையோ எரிக்க பெட்ரோல் அல்லது வெடிமருந்துகளைப் பயன்படுத்துவது அபாயகரமான அறிகுறி. கடந்த ஒரு மாதத்தில் 5 இந்து நபர்கள் கும்பலால் கொல்லப்பட்டுள்ளனர்’’ என்றார். ஆனாலும், தீபு சந்திர தாஸ், அம்ரித் மொண்டல், கோகோன் சந்திர தாஸ் தவிர மற்ற 2 மரணங்கள் குறித்து தேப்நாத் விரிவாகக் கூறவில்லை.
* 2022 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வங்கதேசத்தில் இந்துக்களின் மக்கள் தொகை சுமார் 1.31 கோடி. இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 7.95 சதவீதம்.
* சிறுபான்மையினர் மட்டுமின்றி முற்போக்கு முஸ்லிம்களும் வங்கதேசத்தில் பாதிக்கப்படுகின்றனர்.
* கடந்த ஓராண்டில், இஸ்லாமை போதித்த முற்போக்கு முஸ்லிம் துறவிகளின் பல நூற்றுக்கணக்கான சுபி வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் உள்ளன.
* சமீபத்தில் அடக்கம் செய்யப்பட்ட முஸ்லிம் மதகுருவின் உடலை மதவெறி கும்பல் ஒன்று தோண்டி எடுத்து தீ வைத்து எரித்து, அவரது ஆலயத்தையும் சேதப்படுத்தியது.
