சிவகிரி: தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே வாசுதேவநல்லூர் பக்கம் ஊருக்குள் புகுந்த மழை நீரால் அவதியுற்ற பொதுமக்கள் தீர்வு கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் சிவகிரி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லவே சிரமப்பட்டனர். இந்த நிலையில் நாராயணப்பபேரி குளம் நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்ந்தது. ஆனால் மறு காலில் உள்ள ஆக்கிரமிப்பு காரணமாக மழை நீர் சிந்தாமணிப்பேரிபுதூர் ஊருக்குள் புகுந்தது.
மேலும் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரும் ஊருக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி சிந்தாமணிப்பேரி புதூர் பகுதி மக்கள் தென்காசி-மதுரை சாலையில் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுமார் 40 நிமிடங்கள் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிவகிரி தாசில்தார் அப்துல் சமது, இன்ஸ்பெக்டர் சல்மோன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
